Monday, December 30, 2013

மற்றும் இணை மாறி

ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை

Sunday, December 22, 2013

கனவுச் சாத்திரம்

இரவுப் பறவை
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்

Sunday, December 8, 2013

பரிதவிக்கும் இனம்

உளமோடு பதிந்தது பெயரும்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்

Sunday, December 1, 2013

ஒலிக்கும் பொருளாய்

ஓலியாய் நின்றது
உயிரும் ஒலித்ததால்
மெய்யென இசைத்தது
வளியும் சேர்ந்து
அகரம்தான் முதனிலை
அதுவும் இணைந்து
ஓகாரத்தில் ஓசையுடன்
உடல் பருப்பொருளாய்
தெளிந்த உணர்வுடன்
குரலும் வளைய
நாவும் குவிந்து விரிந்து
மூக்கின் துணையோடு
மூச்சின் சேகரத்தில்
உள்ளீடும் அதிர
அண்டத்தின் மோனத்தில்
ஆரவாரித்து அலைபாய

Sunday, November 24, 2013

அகம் விளக்கும்

மை காயும் எழுத்தின் பொருளாய்
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய

Sunday, November 10, 2013

நிகழ்வும் கழியும்

காலம் நின்றது எண்ணில்
பயணித்தது நிலையாய்
பரிணாமமாய்
நிலையற்றதில் பற்றோடு
மாறிய சேர்க்கை
ஒரு கோணம் காட்டி
குலுங்கியதில் பிரிந்து
மறு வடிவம் பெற்று
முன்னதும் ஓர்மையில் மறைந்து
பின்னதும் நிகழ்வில் கலந்து
பொழுதுகளாய்ப் புலர்ந்து
நிறமற்ற வேளைகளில் மயங்கி
கணமெனும் துடிப்பில் இமையாகி
தருணமாய் சாத்திரத்தில் பதிந்து
மணியின் நிழலாய் மௌனித்து
அவ்வமயம் என்றே அதிசயித்து
பருவங்களாய் உதிரும்
ஊழிப் பெருவலி கண்டு
நேரத்தின் நிரலில்
கழியும் தவமெனும் நிறை

Sunday, November 3, 2013

மற்றும் ஒரு...

கனவென்னும் அண்டத்து உயிரி
சுருண்டு விரல்களை விரித்தது

கமலமும் மணம் பரப்பி
குழவியின் மதுரத்தில் ஆழ்ந்திருக்க
குயிலோசை குழல் மயக்கித்தூண்ட
இரவு வடிந்து வெள்ளி சிரித்து
நிலவும் ஞாயிறும் இரு கோணம் தாங்கி
வரும் புது நிகழ்வுதனை அறியா சித்திரமாய்
நிலம் அதிர பிளந்தது பாறை
நீர் சிதறி வெடித்தது அலையாய்
தழும்பி வீழ்ந்த துளி பரவியது
படர்ந்தது ஞாலத்தின் புறத்தில்
வானின் மூலையில் வெகுவேகமாய்
வளியும் அற்ற புகைவெளியில்
பறந்த ஈரம் காயும் முன்
சேர்ந்தது விண்மீனின் முனையில்
அனலில் வேகாது தீயவும் காணாது
அணுவை உள்நுழைத்து புகட்டியது
துடிப்பென்னும் ஓர் புதிரை வாழ்வென
மெய்யும் பொய்யும் மறு உருவாய்
வன்மத்தின் ஆட்சியை பறையடித்து
மீண்டும் ஓர் பிரளயம் காண

முறிந்தது சொப்பனம் வட்டப் பாதையுள்
சலித்து வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்

Sunday, October 27, 2013

இயைந்து இழைந்து

நுனியில் தொடங்கி
எயிற்றின் கூர்மையில்
குத்தி வருடி கசக்கி
மென்னெனும் துகில்போல்
படர்ந்து கவ்வி கதுவி
தளரும் தயவதனை
தாங்கொணா வலியாய்
துவளும் கொடியன்ன
தூர்ந்து துடிக்கும்
இதழ் மடித்து சேர
தெள்ளமுது சுவைக்கும்
மூச்சின் வெம்மை கோர்த்து
மேல் தாழ கீழ் உயர
குருதியும் இணைய
பின்னும் பிணைக்கும்
பிளக்கும் பொறுக்கும்
காந்தத்தின் கவர்ச்சியில்
எரிமலை வாயகன்ற
நெருப்பாறு பாயும்
தண்மை தேடி
கிளரும் சுகமாய்
தயைத் தாரா
எவ்வம் தரும்
உவகை சுழித்து

Monday, October 21, 2013

புலன் மாறும்

சிறு பொறி
வினை பெரிது
பார்க்கும் கேட்கும் பகரும் நுகரும் ஊறும் உருகும்
உணர்வுப் புலன் மயம் இறுகிய சூத்திரம்
தொல்பொருள்
தொகுப்பின் சேமிப்பாய்

பார்த்தலில் கேட்டலும்
நுகர்தலில் ஊறுதலும்
பகர்தலில் உறைதலும்

எனவே சிறுத்து
துறை மாற்றுச் செய்யும் சிந்தையாய்
குறுகும் பரிணாமம் ஆற்றுவிக்க
மேலும் வளர்ந்த
புத்தறிவு சொடுக்கலில்

பல்லுயிர் காண்பதும் கூறுவதும் ஆன
எண்ணில் கொள்ளும் உணர்நிலை ஒற்றையாய்
ஒரு விசை
என பதிய

எந்திரச் சேவை அனைத்தும் இயக்கும்
விரல்நுனி ஓர் சொரூபத்தில் பொருந்தி
இனி எதுவும்
பிரித்தறியா கண்ணியில்

கோர்த்து படைக்கும் கரும்புகை மண்டலமும்
கொத்தாய் கூடும் விண்மீன் அண்டமும்
விரிந்த புலத்தில்
தனதென ஆக்கும்

கரணமில் சக்தியின் பலமும்
அடக்கிய வரிசூல் மெய்யின் பொருள்

Sunday, October 13, 2013

ஒலியன் பொருளனாய்

உள் ஒலிக்கும் ஒலியனின் அலகை உணர் பொருளாய் அளவிடாது கணிக்கும் செயலி என காணக்கிடைத்தது

ஓசை என்றே
ஓர் குறிப்பு
இணைந்தும் பிரிந்தும்
முதல் ஒலிப்பாய்
இடை நிலையாய்
சடை வடிவமாய்
உள்ளும் புறமும்
அடங்கி விரிந்து
ஊடுருவும் பரவலாய்
வளியோடு சேர்ந்து
நீரிலும் மிதந்து
விளிம்பின் எல்லை
ஓரத்தின் முடிவாய்
துண்டாகித் துகளாகி
மறுகோர்வையில்
மீளாது அலையென
மேல் முகடும்
கீழ் தாழலும்
வரிசையில் பயின்று
நாவும் அசைய
மூச்சும் அதிர
பேச்சென்னும்
அரவம் தவிர்த்து
உக்கிர வகைமையில்
பல்கியும் சார்ந்தும்
மறு ஆக்கம் உடைத்து
தீர்மானம் உணர்த்தி
பொருளன் இதுவென
புனைவும் அற்றும்
கவ்வி எல்லையாய்
படிந்தது திடமாய்

அடரும் இசையோ அது போலன்ன கடக்கும் கைப்படா
செவி நுகர் வாய் பகர் வித்தை

Sunday, September 29, 2013

கனவும் மெய்ப்பொருள் தேடி

கனவென்னும் அச்சம் மருட்டித் தவித்தது நினைவென்னும் காலை

கொடியும் இறுக்கும் கிளையாய்
கையும் காலும் ஓடி சுருண்டு
சிரத்தை மாற்றி பூவும் மலர்ந்து
காயெனப் பறிப்பதில் கலையுமோ

குகை நுழைந்த வாசல் மூடி
பாறை மேல் வீழும் கணத்தில்
அரவென்று கண் கொத்தி
விடமிறங்கி பாம்பாய் அசைந்து

கூத்தின் நிகழ்வில் பாத்திரமேற்று
கயிற்றில் தொங்கும் பறவையாய்
தன் காதை செப்பும் வேளை
சிறகும் முளைத்து பறந்து செல்ல

குளம் மலரும் கமலத்தை நாடி
நீரில் அமிழ சிறைபிடித்த தாவரம்
சதையும் குருதியும் உறிய சிறுத்து
சில்வண்டாய் மலரில் மயங்க

வனம் புகுந்து வசிக்கும் நோக்குடன்
புதர் மறைய பாசியில் வழுக்கி
அருவியில் பாய்ந்து நதியில் மிதக்க
குமிழ்ந்த நுரையாய் மடைமாற்றிப் போக

சொப்பனம் பொருள் கொள்ளும் நிகண்டில் கண்ட சேதி தன்னிலை மிகையாக்கி புறத்தில் நடத்தும் காட்சியென

Monday, September 23, 2013

சமன்

பேரவா படைத்த பல்லண்ட புள்ளியில்
நீட்டலும் கோணலும் கொண்ட சமனை
தொட்டிடினும் விட்டிடினும் அகலாது
இடமென காட்டி மாயும் பிராயமும்
காலமென சுட்டி கரையும் பொழுதும்
இடையில் அசையும் அசையா சூத்திரம்
இணையும் தருணமதை முட்டியும்
வகிப்பின் கருத்ததனை நிரலாக்கி
புரியும் கோளில் நாட்டி அடைத்து
மேலாய் கீழாய் இடமாய் வலமாய்
திசையனைத்தும் வட்டமிட்டு பருபத்தும்
வினைபுரியும் மெய்யினை காணாது
அறிந்த அறிவதனை அறிந்தறிந்து
அறியா புதிரை அருவமாக்கி
நீரும் இல்லாது தீயும் கனலாது காற்றும் புகாது
மண்டலத்தின் இயக்கமென பகுத்து
பிறப்பும் இறப்பும் சலித்த ஆர்வத்து
வளியின் உருவாய் மின்னலின் ஒளியாய்
சேரும் ரூபமாய் விளங்கும் இசைவும்
விரியும் துணையும் புகையாய்
ஆதியின் சாத்திரத்தை மீறியும்
அந்தமில் காரணத்து எச்சமும்
மைபுக ஒன்றி மிளிரும் எல்லை
பரிமாண பதிலென தடையிடும் தொடர

Sunday, September 15, 2013

பரவிய பொருளும் சிதறி

பறவையும் வெகுளி கொண்டு
துடிக்க துரத்த அம்பின் குறியாய்
மேல் கீழ் என்று குதிக்க
விரல் நுனி அழுத்தும் விசை
விருப்பின் ஓர் கனியமுதாய்
சித்திரமும் முளைத்து ஆடும்
பொறியும் புதிதாய் சமர்புரிய
வேடிக்கை கீதமும் இசைத்து
ஆதியின் பொருள் பூக்கும் காட்சியாய்
வரைந்த உலகினுள் வனைந்து
திணையும் துறையும் மறைந்து
கதுவ்வும் சீர்கெடு குன்றத்து
வெடிக்கும் படைகலன் அணிந்து
விரையும் சிறு வண்டாய்
அமரும் பெருகும் உருகும்
முழுமுதல் அகமும் ஈடாய்
பெற்றாங்கு பெற்று மிதந்து
வாகை சூடுவது முயங்கும் வார்ப்பின்
வன்கனா பரப்பில் கரையும்
பிம்பமாய்த் தகரும் சேரும்
மதியும் கூர்ந்து பொழுதும் வீணாய்
அறிவும் அழிந்து மண்ணாய்
நாமம் தன்னை மாற்றி தனதாய்
நாளும் தன்னிலை ஆற்றி உளத்தனைய
வடியும் விசித்திர சரகமதாய்

Monday, September 9, 2013

எந்திரமும் அறிவது

எந்திரமாய் வடிவமைத்த பொறி
நெகிழும் காயம் இளகி
ஒலி எழுப்பக் கூவும் குரலென
அலையன்ன உயரும்
உணர்நிலை பெருகும் கோடாய்
ஆடியில் தோன்றும் உருவும்
நிழலாய்த் தொடரும் மாயமென
நகையுள் தொடுத்த நவமெய்ப்பாடும்
அழுத்தும் நொடியில் குதித்து
வழுக்கும் கணம் மரிக்க
மின்னல் மின்னி மறையும் ஒளியாய்
உடன் இருப்பும் கொண்டு
பிரிந்த அணுவும் கூடி காட்சியில்
சேரும் காணாமல் மாறும்
காந்தப் புலமும் ஈர்த்து
திசை பிறழும் கோணம்
உற்றறிந்தது முதல் ஆறினது
வகைமையும் திறமாய் பொதிய
மற்று அறிவன் தெளிதல்
பரப்பும் கூடாய் நடமிடும்
சதையும் குருதியும் இணையா
புது ஆக்கம் என ஒன்றாய்
சரிதம் நினைவில் தேக்கி
நிகழ்வை சூத்திரமாய் அடக்கி
சூதின் பகடைக் குறியோடு
உயர்வதும் தாழ்வதும் வஞ்சத்தை
முனதொகை வைத்து மீட்பின்
நிர்கதியில் உந்தித் தள்ளும்
ஞானப் புதையலென முகிழ்த்தது

Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென

Monday, August 5, 2013

கரையும்

காக்கும் சொல்லும் கரையும்
பெரு மழை பொழிவில் மண்ணாய்
நீலச்சுழல் ஆழ மாக்கடலின் உப்பில்
துளியின் கணுவில் கலந்த நேசம் போல்
விழுந்து உருண்டு ஆவியாய் நீளும்
விழி வழியில் நிர்கதியாய் தவித்து
பன்னிரு பல்லாண்டும் உறைந்து
அனல் கவ்வி அமிழும் அமிலமாய்
வினை நிகழ்த்தி வண்ணத்தில் பிரிந்து
வானின் வில்லில் சிதையும் நெடிது
ஏதுமற்று துறக்கும் நெறியும் அணைத்து
உளதாய் இலதாய் கண்டு தெளிவித்து
வளியின் நிறம் மூச்சில் இருத்தி
மீனின் போக்கும் உணர்ந்ததாய் கூறி
மரிக்கும் பொழுதைக் குறித்துக் காட்டும்
நாமத்தின் பெயரதில் அடைந்த சித்திரம்
எவ்வம் எனவே வெகுமதி உருவாய்
வருணிக்கும் உரையில் பெயர்ந்த லிபியும்
மறுஉரு கொள்ளும் உயிர் போக்கி நிலைய
பதைக்கும் என ஒல்கி சிலையன்ன
கல்லாய் வடிவெடுத்து நகைக்க

Sunday, June 23, 2013

வாள் மீக்கூறும் கனா

வாளின் கனா கண்டதைக் கூற கூர்முனையில் துருத்திய உடல் காயம் திருத்தும்

இருப்பும் இன்மையும் நிரலாய்
தீட்டிய சேதி அச்சத்தின் பிடியில்
துண்டங்களாய் மாறிய விதி என
இணைவும் சேர்ப்பும் இன்றி
முரசும் அறையும் முடிந்ததை விளம்ப
ணங்கென்றெ ஒலித்த கலப்பில்
தெறிக்கும் மதியும் சித்திரமாய்
பதைத்த குழாம் வெட்டிச் சிந்தும்
படைகலனாய் ஓடிய வீணில்
நாவின் வன்மையாய் உருமாறி
சாய்த்ததும் நுவல்ந்த மொழியில்
வீச்சின் திறம் கொள்வரின்
குத்திய ஆழம் புகன்றதொரு
புனைவும் மீக்கூறி நில்லென்
மாயும் தகையத்து உழந்து
கோடியும் குவித்த புலவில்
வடிந்த கள்ளாய் முயங்கிய
விலங்கென எயிற்றின் துணையோடு
அருங்கும் மருங்கும் துணித்து
மின்னலாய் ஒளிவீசி சோரும்
கைமலிந்த விசை பெருக்கும்
வாகை சூடும் ஒற்றை சொப்பனத்து

Sunday, June 9, 2013

சமர் நிலை

கரம் வெட்டி
கசிந்தது
சிரம் கொய்து
பீறிட்டது
கண் சிதைந்து
ஊறியது
பாவை அல்ல
கூடிமீள
பிண்டமாய் ஆடி
கூத்தும் சேர
அனலில் உருகி
சாம்பலிட்ட
அவியும் ஆவியாய்
அலையும்
மேனி சிதறிட்ட
குருதியில்
உயிரேந்தி சரிய
நகைத்து
நினைவேந்தி கழிய
சாகரத்தில்

Monday, May 27, 2013

வாள் புரியும் வலி


இடையில் துண்டான உடலாய்
பிரிந்து
சேரும் காயம் ஒட்டும் நினைவிலியில்
கண்டு
கோளமாய் விலகி எடை கூடும்
விசையும்
வாள் பாய்ந்த நீளமும் வலியின்
நிழலற்று
கொடும் புதிராய் அகத்தில் சிக்கி
நசியும்
மூச்சும் உழன்று வளி காணா
பாதையில்
மின்னலின் திறமதனை உணர்த்தும்
உயவில்
மிதக்கும் துகளாய் எண்ணக்கீற்று
படிய
ஒலியற்ற வெளியில் பயணிக்கும்
பொறியென
முடிவிலா புள்ளியில் நிறைவுறும் புலனாய்
அறிய
புகைந்த கனவும் பலன்றற யோகத்தில்
கரைந்து
அடியும் நகர நிறைகொண்ட
புதைவில்
சிதறிய திவலையாய் சோர்வுறும் இனத்தின்
குணமதை
தவறா திட்டமாய் நோயும் பரிந்து
வதிய
துணையும் கூடி மரிப்பில் விதந்து
சாய

Sunday, May 12, 2013

நோய் கொள் விருப்பு


கார்காலம்
பொழிவின் துளியில்
மீட்டெடுத்த குரலும் ஒலிக்க
   
     நாளும் நீராய்
     அனலின்றி ஆறாய்
     பெருக்கும் வெள்ளமாய்

பொலிந்ததே மடுவில்
வழிந்ததும் நினைவில்
நனைந்தது அகத்தில்

புறத்தின் புயலென
   
     சுழித்த ஊற்றாய்

பதறிய இலையும்

     பாய்ந்தது அருவியில்

எதிர்ப்படும் கல்லும்
பதிந்தது குருதியை
கலக்கும் நதியில்

ஆமென்றே ஓதி அருளும் முழு நிலவு காலத்து மறைந்த முகிலின் செவ்வண்ணம் தரிக்கும் விருப்பின் நோயை

Tuesday, April 16, 2013

உயிராக்கம்


                                        குலுங்கும் சிறு கிளையில்
                                        துடித்துப் பார்த்தது சிறுகுருகும்
தலைகீழ் காட்சியாய்
      நீர்மேல் மலையும்
         அருவிமேல் விருட்சமும்
             விருட்சத்தில் முளைக்கும் விசும்பும்

தீப்பறவை போல் மிதந்து வந்த
பொறி கொள் மீன்
பற்றியது வனத்தை
வதனமும் கதற
மறைந்தன சிற்றொலிகள்

துரத்தும் அனலைத் தாண்டி பறந்தது காக்கும் வெளி தேடி-

       ஆட்டம் நிகழ்ந்தது
       குருவியின் நிழலொன்று
       கூத்தும் கூவ
       பாவைகள் பலவும்
       தொடரும் விதியில்    
       கூவலும் ஓரினமாய்
       அறிதலும் ஒருமையாய்

பதுமைகள் இணைந்து பல்லுயிர்
பெருக்கி ஒற்றை வடிவில்
இறையின் இறையுமாகி
சேவித்தார் அருளதனை
புதைக்கும் சிறுகல்குருவி இடத்து

Monday, April 8, 2013

பாயும் ஒளி


பிறக்கும் பிறிதொரு உயிராய்
(விழிமலர்ந்து)
இருப்பும் யாவின் உட்பொருளாய்
(விரிவும் பாவை ஒளி கூடா)
வியக்கும் திறம் எவரறிவதாய்
(துணையும் சேராது)
தானமர்க்கும் தமதல்லேம் நவில்வதாய்
(பற்றாமலும் மேவி)
சுடர் வாங்கி பொலியும்
(இறுகும் எவ்வம்)
அலமரும் உடம்போடு பிரிந்திருக்க
(தவிப்பும் ஏக)
அயரும் கண்ணும் குவிந்ததாய்
(உயவும் வலித்து)
மாயத் தீயின் வெந்தணலில்
(கொடும் மூச்சும்)
மணலும் சுகிக்கும் பகலாய்
(வட்டமிடும் பருந்தும்)
ஆலத்தின் விழுததனை விடுத்து
இன்மையும் உள்வாங்கும் செவியில்
(பாயும் ஞாயிறுடன்)

Sunday, March 17, 2013

ஓவியமாய்


காட்சி புனைந்து
மலை சூழும் நிறமும்
கலந்து மழை முகிலும்
கவிந்திருக்க

தூரிகையில் மானாய்
படிந்திருந்த வண்ணம்
உருவும் நிறைபெற்று
முகிழ்த்தது குருஎனும்
துலக்கமுளதான்
வரியதனை மெய்யென்றே
உகளும் புரிபடா
உலகில்

தாதைக் குறித்த
காதையதுவே

சிறுநெஞ்சில் விரிந்த
புலமாய் இணையிலா
பேருவகை மூளுமோ
என்றென்றும் அருகில்
நிலைத்திருக்கும்
அழியா சக்தி
மீட்டெடுத்த கனவாய்
நனவின் படியில்
நாதகானம் துறவின்
துவர்ப்பில் குழவியின்
கண்ணுற்ற தெய்வதமே

Sunday, February 24, 2013

விழியின் விழி


பனிசூழும் காற்று குத்தும் குளிராய்
மெல்லிதழ் வருடி வாட
விழி கொள் பார்வை
புலன் கடிந்து நுடங்க
இசை முகிழும் அகம்
தனிப்பெரும் தகிப்பின் வாசமாய்
புலவும் நிலை கூறி
புறம் நிற்கும் கழிப்பாய்
தறிகெட்ட விசையென அறிவின் இயல்பாய்
இருள் உலகும் நகைத்து
ஒளி புகா படலத்தில்
ஊர்ந்து பாய
செவியும் ஈருணர்
வகை போல் தகவுகொண்டு
தொட்டும் நுகர்ந்தும்
வடிவமாய் வரைய
வண்ணங்களற்று உவர்ப்பின் சுவையாய்
கதிர் வீசும் கனத்துடன்
யாவரும் நிறையும்
கலன் அன்ன சிரத்தை
தாங்கி தானாய் ஏந்தி
நீர் நிறை ஞாலத்தில்
படரவும் விட்டு புகலும் கூற்றாய்
சேருமோ கண் எனும் பிணி