Sunday, June 23, 2013

வாள் மீக்கூறும் கனா

வாளின் கனா கண்டதைக் கூற கூர்முனையில் துருத்திய உடல் காயம் திருத்தும்

இருப்பும் இன்மையும் நிரலாய்
தீட்டிய சேதி அச்சத்தின் பிடியில்
துண்டங்களாய் மாறிய விதி என
இணைவும் சேர்ப்பும் இன்றி
முரசும் அறையும் முடிந்ததை விளம்ப
ணங்கென்றெ ஒலித்த கலப்பில்
தெறிக்கும் மதியும் சித்திரமாய்
பதைத்த குழாம் வெட்டிச் சிந்தும்
படைகலனாய் ஓடிய வீணில்
நாவின் வன்மையாய் உருமாறி
சாய்த்ததும் நுவல்ந்த மொழியில்
வீச்சின் திறம் கொள்வரின்
குத்திய ஆழம் புகன்றதொரு
புனைவும் மீக்கூறி நில்லென்
மாயும் தகையத்து உழந்து
கோடியும் குவித்த புலவில்
வடிந்த கள்ளாய் முயங்கிய
விலங்கென எயிற்றின் துணையோடு
அருங்கும் மருங்கும் துணித்து
மின்னலாய் ஒளிவீசி சோரும்
கைமலிந்த விசை பெருக்கும்
வாகை சூடும் ஒற்றை சொப்பனத்து

Sunday, June 9, 2013

சமர் நிலை

கரம் வெட்டி
கசிந்தது
சிரம் கொய்து
பீறிட்டது
கண் சிதைந்து
ஊறியது
பாவை அல்ல
கூடிமீள
பிண்டமாய் ஆடி
கூத்தும் சேர
அனலில் உருகி
சாம்பலிட்ட
அவியும் ஆவியாய்
அலையும்
மேனி சிதறிட்ட
குருதியில்
உயிரேந்தி சரிய
நகைத்து
நினைவேந்தி கழிய
சாகரத்தில்