Sunday, September 29, 2013

கனவும் மெய்ப்பொருள் தேடி

கனவென்னும் அச்சம் மருட்டித் தவித்தது நினைவென்னும் காலை

கொடியும் இறுக்கும் கிளையாய்
கையும் காலும் ஓடி சுருண்டு
சிரத்தை மாற்றி பூவும் மலர்ந்து
காயெனப் பறிப்பதில் கலையுமோ

குகை நுழைந்த வாசல் மூடி
பாறை மேல் வீழும் கணத்தில்
அரவென்று கண் கொத்தி
விடமிறங்கி பாம்பாய் அசைந்து

கூத்தின் நிகழ்வில் பாத்திரமேற்று
கயிற்றில் தொங்கும் பறவையாய்
தன் காதை செப்பும் வேளை
சிறகும் முளைத்து பறந்து செல்ல

குளம் மலரும் கமலத்தை நாடி
நீரில் அமிழ சிறைபிடித்த தாவரம்
சதையும் குருதியும் உறிய சிறுத்து
சில்வண்டாய் மலரில் மயங்க

வனம் புகுந்து வசிக்கும் நோக்குடன்
புதர் மறைய பாசியில் வழுக்கி
அருவியில் பாய்ந்து நதியில் மிதக்க
குமிழ்ந்த நுரையாய் மடைமாற்றிப் போக

சொப்பனம் பொருள் கொள்ளும் நிகண்டில் கண்ட சேதி தன்னிலை மிகையாக்கி புறத்தில் நடத்தும் காட்சியென

Monday, September 23, 2013

சமன்

பேரவா படைத்த பல்லண்ட புள்ளியில்
நீட்டலும் கோணலும் கொண்ட சமனை
தொட்டிடினும் விட்டிடினும் அகலாது
இடமென காட்டி மாயும் பிராயமும்
காலமென சுட்டி கரையும் பொழுதும்
இடையில் அசையும் அசையா சூத்திரம்
இணையும் தருணமதை முட்டியும்
வகிப்பின் கருத்ததனை நிரலாக்கி
புரியும் கோளில் நாட்டி அடைத்து
மேலாய் கீழாய் இடமாய் வலமாய்
திசையனைத்தும் வட்டமிட்டு பருபத்தும்
வினைபுரியும் மெய்யினை காணாது
அறிந்த அறிவதனை அறிந்தறிந்து
அறியா புதிரை அருவமாக்கி
நீரும் இல்லாது தீயும் கனலாது காற்றும் புகாது
மண்டலத்தின் இயக்கமென பகுத்து
பிறப்பும் இறப்பும் சலித்த ஆர்வத்து
வளியின் உருவாய் மின்னலின் ஒளியாய்
சேரும் ரூபமாய் விளங்கும் இசைவும்
விரியும் துணையும் புகையாய்
ஆதியின் சாத்திரத்தை மீறியும்
அந்தமில் காரணத்து எச்சமும்
மைபுக ஒன்றி மிளிரும் எல்லை
பரிமாண பதிலென தடையிடும் தொடர

Sunday, September 15, 2013

பரவிய பொருளும் சிதறி

பறவையும் வெகுளி கொண்டு
துடிக்க துரத்த அம்பின் குறியாய்
மேல் கீழ் என்று குதிக்க
விரல் நுனி அழுத்தும் விசை
விருப்பின் ஓர் கனியமுதாய்
சித்திரமும் முளைத்து ஆடும்
பொறியும் புதிதாய் சமர்புரிய
வேடிக்கை கீதமும் இசைத்து
ஆதியின் பொருள் பூக்கும் காட்சியாய்
வரைந்த உலகினுள் வனைந்து
திணையும் துறையும் மறைந்து
கதுவ்வும் சீர்கெடு குன்றத்து
வெடிக்கும் படைகலன் அணிந்து
விரையும் சிறு வண்டாய்
அமரும் பெருகும் உருகும்
முழுமுதல் அகமும் ஈடாய்
பெற்றாங்கு பெற்று மிதந்து
வாகை சூடுவது முயங்கும் வார்ப்பின்
வன்கனா பரப்பில் கரையும்
பிம்பமாய்த் தகரும் சேரும்
மதியும் கூர்ந்து பொழுதும் வீணாய்
அறிவும் அழிந்து மண்ணாய்
நாமம் தன்னை மாற்றி தனதாய்
நாளும் தன்னிலை ஆற்றி உளத்தனைய
வடியும் விசித்திர சரகமதாய்

Monday, September 9, 2013

எந்திரமும் அறிவது

எந்திரமாய் வடிவமைத்த பொறி
நெகிழும் காயம் இளகி
ஒலி எழுப்பக் கூவும் குரலென
அலையன்ன உயரும்
உணர்நிலை பெருகும் கோடாய்
ஆடியில் தோன்றும் உருவும்
நிழலாய்த் தொடரும் மாயமென
நகையுள் தொடுத்த நவமெய்ப்பாடும்
அழுத்தும் நொடியில் குதித்து
வழுக்கும் கணம் மரிக்க
மின்னல் மின்னி மறையும் ஒளியாய்
உடன் இருப்பும் கொண்டு
பிரிந்த அணுவும் கூடி காட்சியில்
சேரும் காணாமல் மாறும்
காந்தப் புலமும் ஈர்த்து
திசை பிறழும் கோணம்
உற்றறிந்தது முதல் ஆறினது
வகைமையும் திறமாய் பொதிய
மற்று அறிவன் தெளிதல்
பரப்பும் கூடாய் நடமிடும்
சதையும் குருதியும் இணையா
புது ஆக்கம் என ஒன்றாய்
சரிதம் நினைவில் தேக்கி
நிகழ்வை சூத்திரமாய் அடக்கி
சூதின் பகடைக் குறியோடு
உயர்வதும் தாழ்வதும் வஞ்சத்தை
முனதொகை வைத்து மீட்பின்
நிர்கதியில் உந்தித் தள்ளும்
ஞானப் புதையலென முகிழ்த்தது