Sunday, January 26, 2014

வயங்கும் பருவங்கள்

பவளப் பருவம்

வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது

அந்தருவப் பருவம்

பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்

உணர் பருவம்

பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து

புனர் பருவம்

மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்

புதை பருவம்

கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்


மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.

Thursday, January 9, 2014

அகம் மற்றும் ஒரு முகம்

வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே