Sunday, March 2, 2014

கேளா பாடல்

பச்சை வாசம் படர்ந்தாங்கு
குளிர் கடுக்கும் மேகத் துணுக்கின்
ஊடே பெருகும் ஓசை ஒன்று
இனிமையும் தனிமையும் ஒருங்கே
சமைந்த அருவியின் கொட்டுதலாய்
இலைகளின் இடுக்கில் நுழைந்து
பழச்சோலைகளில் பதுங்கிப் பரந்து
தெவிட்டா கானமாய் தொலைவில்
ஒலிக்கும் தேமதுரத் தெள்ளமுதாய்
மேலேறும் உச்சம் வான் உயரம்
வளியில் பூக்கும் கோலமென
கீழிறங்கும் சரளம் நீரின் தண்மையன்ன
சலசலத்து சுழிக்கும் நதியாய்
வனம் நிரம்பும் குறிப்போடு
வர்ணத்தின் ஜாலமாய் சுகமதில்
இணைந்து துயில் கொள்ளும் செவியினில்
கேளா பாடல் குவிமதி இசையாக