Sunday, May 25, 2014

சாரியை வாசகங்கள்

அள்ளெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

சேர்தலும் விலக்கும் இரங்கலும்
நல்லிழைதலும் என்றே கூடி
ஒருங்கு குவித்த எம் நிலை
தவிப்பில் வாடி சுருங்கும் காயமாய்
புரிந்திட்ட ஒழுங்கென இயைபென்றானதுவே

அன்னெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
கண்ணிலும் அகத்திலும் ஆடி எம்
துயர்காணாது தன் விருப்பில் சுமை
கொண்டே விதிரும் சிற்றுயிராய்
சிறகசைத்து திணையாகும் எனவே விதிக்க

அள் ஈராய் மறுவாசகம்:

கரைந்தனள் புலம்பினள் விழிபெருக்கினள்
எனும் காட்சியாய் ஏட்டில் பதியும்
பாவை அன்ன திரியும் உடம்போடு
எவ்விலங்கும் ஈனும் உணர்வினதாய்
விடுத்து புலன் விளக்கும் புதுநெறி பாற்பட்டே

அன் ஈராய் மறுவாசகம்:

எதிர்த்தனன் விதித்தனன் சூடினன்
என்று வர்ணிக்கும் பொருளில்
விரிந்த வடிவாய் ஏற்ற
உறுதியோடு திறம்பட்ட புனைவென
அலையும் மெய்யாய் ஏந்திய இவ்வண்ணம்

அள் ஈராய் ஒரு வாசகம்:

தொடர்புற்றனள் அலையாய் தன்
வடிவும் உருமாற்றி மனமும் விழியாய்
புள்ளியில் கோர்த்து செரிக்கும்
பல்வினை தாண்டி வலி கூட்டி
வளி அடைந்த வானமாய்

அன் ஈராய் மேல் வாசகம்:

குழவி போல் நீரில் அலையும் ஒரு
பயனும் காணாமல் நீந்தி தவிக்கும்
இருப்பில் கடனாய் நின்ற ஒலியாகி
சர்வமும் சரண்டையப் பணியும்
சீவனாய் ஆனதேனோ

Sunday, May 11, 2014

தகிக்கும்...

நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று