Monday, April 20, 2015

கானகத்துக் கூட்டம்

நதி வேகம் தாளாது
மானும் குழுவாய்
நீரில் மிதந்து
அளைந்து அணைத்து
நீந்தி புறம் சேர

                                 பெருவெள்ளப் புள்ளியில்
                                 சிக்கி சுழன்ற பிணை
                                  தனித்து தவித்து
                                  தான்மட்டும் கடந்து
                                  வேறு கரை காண

பச்சை கானகத்து
கூட்டம் மறைய
ஈரம் நனைய
ஓசை வந்தடையும்
திசை நோக்கி

                                 அச்சம் தின்று
                                 அலறும் முனைப்பும்
                                 இனம் தேடி
                                 பாயும் பேரரவம்
                                 பதுங்கி ஒடுங்க


தம் இணை பாரா
தளிரும் விருப்புற்று
தயங்கும் தேடலில்
தொடரா வினையோடு
விளையும் வெறுப்பில்

                                  விழி சோர்ந்து
                                  இமை மூடி கனத்து
                                  குரலும் ஓய்ந்து
                                   தாகம் பெருக்கி
                                  ஓடையில் குளிர

எதிர் முனை காட்டும்
துணையின் நிழலில்
துள்ளித் தாவி
இடர் தவிர்த்து
அகம் கொள்ள

                                  கொடுமா பின் வர
                                  அகலவும் இயலா
                                   நிலை நிற்றல்
                                   உயிர் விடுத்து
                                   ஊண் பசியாற

தோல் போர்த்தும்
விளையாட்டில் கூடி
பிளக்கும் வலி
பெயர்த்து மலிய
நிரல்மிசை வழுக்கும்Sunday, April 12, 2015

சிக்கலுற

வண்ணத்துப் பூச்சியும் பறத்தலை
மறக்கும் சிறுநூலைக் கட்டி
வலையாய் விரித்து நீரில் ஆட
மீனின் வாயும் அதனைக் கவ்வி
சிக்கலுற வளையும் மீளல் இன்றி
சிரத்திலிருந்து வாலின் துடுப்பும்
இடையறாது பிணிய முடித்து
நீந்தும் திறனும் விடுத்து எடைகூடி
அமிழ்ந்து எழுந்து கடிந்தூர
சுற்றும் கயிறை நீக்கும் திசையறியா
வழிதவறலில் கல் புரண்டு
மண் புதைந்து கொடி நிரவி
வளியும் பழி தீர்த்ததாய் ஒப்புவித்து
குமிழி உடைத்து உருக்கொண்டு
ஆற்றுலும் வீணில் நிலைமாறி
ஈர்க்கும் விசையில் பயணித்து
நடுவன் குளத்து மிதக்கும்
அச்சக் கனவில் பரிதவித்து

Sunday, April 5, 2015

துயர் அலை

இளஞ்சிவப்பு மொட்டும் விரிய
துயர் அலை பரப்பி புதரில் கவிழ
இணை மகிழ் தாவரத்தின் முளைப்பில்
துதி தேடி வளரும் செம்மலர் பூக்க
முள்ளின் முடிவிலா கூரில்
கிளைத்த காதை மதி மயக்கும் என
விருத்தத் தொடரில் ஈட்டி சேமித்து
பித்தின் களியில் புகுத்தி ஏமுற
குருதிச் சிவந்த பூவின் கிளையும்
வரும் விசித்திர கோண்மையின் நிழலாய்
மறக்கும் விழைவில் விடுப்புற்று
பேசிய செடியின் ஒலியைக்
கோர்த்து அசையும் இட்டு நிரப்பி
பிரிவுள் கூடி மடிந்த ஓர்மை
இழை பிரிந்து தோதாகி ஓத
பிராயம் கனிந்து வளர்பெறும்
கூடின் பூடாய் தரித்து முதிர