Tuesday, December 29, 2015

இயல் நிலை

எம்மனதின் ஊஞ்சல் கயிறு பிணைத்திழுத்த சகோரத்தின் கழுத்தில் தடம் பதித்த உருவாய் வலியும் தீரா திக்கில் உதிரும் செண்டின் தோற்றவாய் காணா கிடைத்தொழுக்கம் திரண்ட பதியமதில் முழ்கும் முளைவிடா யோகத்தருணமது உம்மை கொணரும் நுண் புள்ளி வீழுமோ அக்குளத்தின் அங்கணச் சேற்றில் ஆதிவிடம் கரைநிறை முயக்கும் கள்ளோடு தேமதுரச் சாறும் தூது செல்லா வளியின் பின்னே விரைந்தோடும் சக்கரத்து தேர்க்காலில் இட்ட பலாச்சுளை மிஞ்சா தீரத்தில் எம்மை என்புறுவாய் ஆக்கிட்ட இச்சை சொடுக்கும் கணத்தில் தேயும் ஆறலை மெய்யும் வருந்தா தினவோடு உம்மில் அமிழும் கரைசலில் விலகுமோ கோர்வை கொள் உப்புநீர் சொறியும் விழிகோளத்து சேர்வையில் தொலையும் நிழல் விதிரும் இதழ் சேரா மருட்கை அலையும் எமது அவயமறு ஆதாரத்தின் சின்னமாய் சிக்கி கசியா உமது கருங்கல் ஞாலத்தில் பிரியுமோ உளமெனும் சாறும் உயிரெனும் கூடும்.

Monday, September 14, 2015

பெயரிலா நினைவில்

வட்டச் சுழல் ஆடி
வனைந்த குமிழில்
இறகும் புக
ஊசி முனை
வளியும் நுழைய
படபடக்கா சிறகின்
அசைவும் சிரத்தில்
கொண்டு அசைய
வண்ணம் ஒட்டிய
சுவரில் ஒளிவீழ
காப்பும் எடையாய்
மலரா வாசம்
ஈர்க்கும் புலனாய்
வீச்சின் துவர்ப்பில்
இறுகும் விடியும்
கோர்த்த உடனுறை
மௌனம் விரிய
அரிவரி ஆகும் என
அனலிலும் வாடா
குளிரிலும் நடுக்கா
அவ்வமயச் சாத்திரத்தில்
ஓர் சருக்கம் என்றே
புரளும் தற்கூற்று
வேட்டலில் மேன்மையும்
இகத்தின் நற்சான்றாய்
பெயரும் நிறம் கூட்டி

Sunday, August 30, 2015

இசை பகர்ந்து

துருவத்து மீனும்
கோளின் நிகர்
ஆழத்துளையின்
செம்மை நீளும்
புனல் சேர்ந்த
ஓடை பாய்வதில்
நாவியும் ஓடி
மென்ஒலி இசையும்
பெருக்கெடுத்துப் பகர
வினையாவும்
சமைந்து கூம்ப
பெருங்கனிக் கூட்டம்
தேன் சொரியும்
மலர்ப் பொய்கை
ஈர்க்கும் சுவனத்து
இம்மையின் பெற்றியில்
வேற்றசைவும்
முறுக்கேறி பதிய
சாக்காடு நோகா
துயரத்தில் சார்ந்து
முற்றிடும் கோவை

Monday, April 20, 2015

கானகத்துக் கூட்டம்

நதி வேகம் தாளாது
மானும் குழுவாய்
நீரில் மிதந்து
அளைந்து அணைத்து
நீந்தி புறம் சேர

                                 பெருவெள்ளப் புள்ளியில்
                                 சிக்கி சுழன்ற பிணை
                                  தனித்து தவித்து
                                  தான்மட்டும் கடந்து
                                  வேறு கரை காண

பச்சை கானகத்து
கூட்டம் மறைய
ஈரம் நனைய
ஓசை வந்தடையும்
திசை நோக்கி

                                 அச்சம் தின்று
                                 அலறும் முனைப்பும்
                                 இனம் தேடி
                                 பாயும் பேரரவம்
                                 பதுங்கி ஒடுங்க


தம் இணை பாரா
தளிரும் விருப்புற்று
தயங்கும் தேடலில்
தொடரா வினையோடு
விளையும் வெறுப்பில்

                                  விழி சோர்ந்து
                                  இமை மூடி கனத்து
                                  குரலும் ஓய்ந்து
                                   தாகம் பெருக்கி
                                  ஓடையில் குளிர

எதிர் முனை காட்டும்
துணையின் நிழலில்
துள்ளித் தாவி
இடர் தவிர்த்து
அகம் கொள்ள

                                  கொடுமா பின் வர
                                  அகலவும் இயலா
                                   நிலை நிற்றல்
                                   உயிர் விடுத்து
                                   ஊண் பசியாற

தோல் போர்த்தும்
விளையாட்டில் கூடி
பிளக்கும் வலி
பெயர்த்து மலிய
நிரல்மிசை வழுக்கும்Sunday, April 5, 2015

துயர் அலை

இளஞ்சிவப்பு மொட்டும் விரிய
துயர் அலை பரப்பி புதரில் கவிழ
இணை மகிழ் தாவரத்தின் முளைப்பில்
துதி தேடி வளரும் செம்மலர் பூக்க
முள்ளின் முடிவிலா கூரில்
கிளைத்த காதை மதி மயக்கும் என
விருத்தத் தொடரில் ஈட்டி சேமித்து
பித்தின் களியில் புகுத்தி ஏமுற
குருதிச் சிவந்த பூவின் கிளையும்
வரும் விசித்திர கோண்மையின் நிழலாய்
மறக்கும் விழைவில் விடுப்புற்று
பேசிய செடியின் ஒலியைக்
கோர்த்து அசையும் இட்டு நிரப்பி
பிரிவுள் கூடி மடிந்த ஓர்மை
இழை பிரிந்து தோதாகி ஓத
பிராயம் கனிந்து வளர்பெறும்
கூடின் பூடாய் தரித்து முதிர

Sunday, March 29, 2015

இருப்பென்னும் இன்மை

இருப்பென்றும்
இன்மையென்றும்
இருப்பாகி நின்று
இன்மை யனைய
இருப்பில் நிகர
இன்மையும் பகர்ந்து
இருப்பும் இலங்க
இன்மையில் பதிந்து
இருப்பை ஈர்க்க
இன்மை யச்சம்
இருப்பில் கரைந்து
இன்மை சார்பில்
இருப்பென்னும் இன்னதும்
இன்மையின் உன்னதம்
இருப்பை நவில
இன்மை வலிந்து
இருப்பில் உளதும்
இன்மையில் சிலதாய்
இருப்பைக் கலந்து
இன்மையில் கழிந்து
இருப்பின் முதுமை
இன்மையில் கனிய
இருப்பின் களைப்பு
இன்மையில் முகிழ
இருப்பின்மை இயல

Monday, March 23, 2015

சிறு மென் உலாவல்

குழறும் நாவில் மிழற்றும் பதங்கள்
வண்ணக் குவியல் பொதிந்த பளிங்குத்
தாழியினுள் முரலும் வண்டும்
சுவற்றில் மோதி ஒலி எழுப்ப
தனித்து பயணிக்கும் செம்மகள்
நீலக்கண்ணால் ஒளியை உமிழ
ஆழியின் அடியில் வெண்மணல்
நலிய பறக்கும் வட்டின் விசை
இசையில் ரீங்கரித்து நீள்கூந்தல்
உருவொன்று இடைப்பட
வெறியும் களியும் புகுந்தாட்ட
கனிவின்றி மிரளும் சிறுபேதை
கருமலர் பறித்து வீசும் கணம்
அருவம் பாய்ந்து குழல் பற்றி
இடியின் பேரரவத்தில் கூவ
அச்சம் உதிர்ந்து சாந்தமும்கூடி
நவமையப் புள்ளிகளில் தூண்டி
கரையும் மின்னலாய் நகர்ந்து
காந்தப் புலமும் சுருளும் பாதையில்
ஒற்றும் உலாவி சோதி பெருக்கி
நீரில் அலை சுழற்றி கவசத்தில் நின்று
புல்லும் ஆதியாய் விகாரமும் ஈறாய்
பல் வடிவப் புடை பெயர்வில்
சிறுமென் பகையும் தவறி வீழ
முளைத்த பிறப்பு யாவும் தொடர் அலர்தலில்