Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்

Sunday, September 14, 2014

குமிழி

குமிழியும் பறக்க இடைவிடாது
வளியின் வழியில் தொடர
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்

நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து
கண்ணின் உள்விழி என மாறி
உள் கவிந்து கலக்கும்

உமிழும் நீரில் ஓரு குமிழி
உள்ளின் சொல்லாய் கிளம்பி
வெளியின் வளியாய் உள்புகுந்து
உண்ணும் இன்மையின் பொருளென

Sunday, September 7, 2014

ஞாயிறும் பிறக்க

அருகா மருங்கில்
அவ்விரி அக்கதிர்
அச்சிறு அம்பலம்
அகலும்

இருள் ஒழியும்
இத்திற நிறத்தின்
இவ்வையகத்தில்
இருந்தவம்

உச்சியில் நிலவும்
உயிர் உருக்கும்
உவப்பில் சிவக்கும்
உரத்தில்

எழும் பகல்
எழும்நிறை
எருவாய்
எரியும்

ஐம்புனல் ஓதும்
ஐயங்காண்
ஐம்புவனத்து
ஐவனத்தில்

ஒளியின் ஓர் கீற்று
ஒற்றை வானில்
ஒருமை காண்
ஒருங்கண்