Tuesday, December 29, 2015

இயல் நிலை

எம்மனதின் ஊஞ்சல் கயிறு பிணைத்திழுத்த சகோரத்தின் கழுத்தில் தடம் பதித்த உருவாய் வலியும் தீரா திக்கில் உதிரும் செண்டின் தோற்றவாய் காணா கிடைத்தொழுக்கம் திரண்ட பதியமதில் முழ்கும் முளைவிடா யோகத்தருணமது உம்மை கொணரும் நுண் புள்ளி வீழுமோ அக்குளத்தின் அங்கணச் சேற்றில் ஆதிவிடம் கரைநிறை முயக்கும் கள்ளோடு தேமதுரச் சாறும் தூது செல்லா வளியின் பின்னே விரைந்தோடும் சக்கரத்து தேர்க்காலில் இட்ட பலாச்சுளை மிஞ்சா தீரத்தில் எம்மை என்புறுவாய் ஆக்கிட்ட இச்சை சொடுக்கும் கணத்தில் தேயும் ஆறலை மெய்யும் வருந்தா தினவோடு உம்மில் அமிழும் கரைசலில் விலகுமோ கோர்வை கொள் உப்புநீர் சொறியும் விழிகோளத்து சேர்வையில் தொலையும் நிழல் விதிரும் இதழ் சேரா மருட்கை அலையும் எமது அவயமறு ஆதாரத்தின் சின்னமாய் சிக்கி கசியா உமது கருங்கல் ஞாலத்தில் பிரியுமோ உளமெனும் சாறும் உயிரெனும் கூடும்.

Monday, September 14, 2015

பெயரிலா நினைவில்

வட்டச் சுழல் ஆடி
வனைந்த குமிழில்
இறகும் புக
ஊசி முனை
வளியும் நுழைய
படபடக்கா சிறகின்
அசைவும் சிரத்தில்
கொண்டு அசைய
வண்ணம் ஒட்டிய
சுவரில் ஒளிவீழ
காப்பும் எடையாய்
மலரா வாசம்
ஈர்க்கும் புலனாய்
வீச்சின் துவர்ப்பில்
இறுகும் விடியும்
கோர்த்த உடனுறை
மௌனம் விரிய
அரிவரி ஆகும் என
அனலிலும் வாடா
குளிரிலும் நடுக்கா
அவ்வமயச் சாத்திரத்தில்
ஓர் சருக்கம் என்றே
புரளும் தற்கூற்று
வேட்டலில் மேன்மையும்
இகத்தின் நற்சான்றாய்
பெயரும் நிறம் கூட்டி

Sunday, August 30, 2015

இசை பகர்ந்து

துருவத்து மீனும்
கோளின் நிகர்
ஆழத்துளையின்
செம்மை நீளும்
புனல் சேர்ந்த
ஓடை பாய்வதில்
நாவியும் ஓடி
மென்ஒலி இசையும்
பெருக்கெடுத்துப் பகர
வினையாவும்
சமைந்து கூம்ப
பெருங்கனிக் கூட்டம்
தேன் சொரியும்
மலர்ப் பொய்கை
ஈர்க்கும் சுவனத்து
இம்மையின் பெற்றியில்
வேற்றசைவும்
முறுக்கேறி பதிய
சாக்காடு நோகா
துயரத்தில் சார்ந்து
முற்றிடும் கோவை

Monday, April 20, 2015

கானகத்துக் கூட்டம்

நதி வேகம் தாளாது
மானும் குழுவாய்
நீரில் மிதந்து
அளைந்து அணைத்து
நீந்தி புறம் சேர

                                 பெருவெள்ளப் புள்ளியில்
                                 சிக்கி சுழன்ற பிணை
                                  தனித்து தவித்து
                                  தான்மட்டும் கடந்து
                                  வேறு கரை காண

பச்சை கானகத்து
கூட்டம் மறைய
ஈரம் நனைய
ஓசை வந்தடையும்
திசை நோக்கி

                                 அச்சம் தின்று
                                 அலறும் முனைப்பும்
                                 இனம் தேடி
                                 பாயும் பேரரவம்
                                 பதுங்கி ஒடுங்க


தம் இணை பாரா
தளிரும் விருப்புற்று
தயங்கும் தேடலில்
தொடரா வினையோடு
விளையும் வெறுப்பில்

                                  விழி சோர்ந்து
                                  இமை மூடி கனத்து
                                  குரலும் ஓய்ந்து
                                   தாகம் பெருக்கி
                                  ஓடையில் குளிர

எதிர் முனை காட்டும்
துணையின் நிழலில்
துள்ளித் தாவி
இடர் தவிர்த்து
அகம் கொள்ள

                                  கொடுமா பின் வர
                                  அகலவும் இயலா
                                   நிலை நிற்றல்
                                   உயிர் விடுத்து
                                   ஊண் பசியாற

தோல் போர்த்தும்
விளையாட்டில் கூடி
பிளக்கும் வலி
பெயர்த்து மலிய
நிரல்மிசை வழுக்கும்



Sunday, April 5, 2015

துயர் அலை

இளஞ்சிவப்பு மொட்டும் விரிய
துயர் அலை பரப்பி புதரில் கவிழ
இணை மகிழ் தாவரத்தின் முளைப்பில்
துதி தேடி வளரும் செம்மலர் பூக்க
முள்ளின் முடிவிலா கூரில்
கிளைத்த காதை மதி மயக்கும் என
விருத்தத் தொடரில் ஈட்டி சேமித்து
பித்தின் களியில் புகுத்தி ஏமுற
குருதிச் சிவந்த பூவின் கிளையும்
வரும் விசித்திர கோண்மையின் நிழலாய்
மறக்கும் விழைவில் விடுப்புற்று
பேசிய செடியின் ஒலியைக்
கோர்த்து அசையும் இட்டு நிரப்பி
பிரிவுள் கூடி மடிந்த ஓர்மை
இழை பிரிந்து தோதாகி ஓத
பிராயம் கனிந்து வளர்பெறும்
கூடின் பூடாய் தரித்து முதிர

Sunday, March 29, 2015

இருப்பென்னும் இன்மை

இருப்பென்றும்
இன்மையென்றும்
இருப்பாகி நின்று
இன்மை யனைய
இருப்பில் நிகர
இன்மையும் பகர்ந்து
இருப்பும் இலங்க
இன்மையில் பதிந்து
இருப்பை ஈர்க்க
இன்மை யச்சம்
இருப்பில் கரைந்து
இன்மை சார்பில்
இருப்பென்னும் இன்னதும்
இன்மையின் உன்னதம்
இருப்பை நவில
இன்மை வலிந்து
இருப்பில் உளதும்
இன்மையில் சிலதாய்
இருப்பைக் கலந்து
இன்மையில் கழிந்து
இருப்பின் முதுமை
இன்மையில் கனிய
இருப்பின் களைப்பு
இன்மையில் முகிழ
இருப்பின்மை இயல

Monday, March 23, 2015

சிறு மென் உலாவல்

குழறும் நாவில் மிழற்றும் பதங்கள்
வண்ணக் குவியல் பொதிந்த பளிங்குத்
தாழியினுள் முரலும் வண்டும்
சுவற்றில் மோதி ஒலி எழுப்ப
தனித்து பயணிக்கும் செம்மகள்
நீலக்கண்ணால் ஒளியை உமிழ
ஆழியின் அடியில் வெண்மணல்
நலிய பறக்கும் வட்டின் விசை
இசையில் ரீங்கரித்து நீள்கூந்தல்
உருவொன்று இடைப்பட
வெறியும் களியும் புகுந்தாட்ட
கனிவின்றி மிரளும் சிறுபேதை
கருமலர் பறித்து வீசும் கணம்
அருவம் பாய்ந்து குழல் பற்றி
இடியின் பேரரவத்தில் கூவ
அச்சம் உதிர்ந்து சாந்தமும்கூடி
நவமையப் புள்ளிகளில் தூண்டி
கரையும் மின்னலாய் நகர்ந்து
காந்தப் புலமும் சுருளும் பாதையில்
ஒற்றும் உலாவி சோதி பெருக்கி
நீரில் அலை சுழற்றி கவசத்தில் நின்று
புல்லும் ஆதியாய் விகாரமும் ஈறாய்
பல் வடிவப் புடை பெயர்வில்
சிறுமென் பகையும் தவறி வீழ
முளைத்த பிறப்பு யாவும் தொடர் அலர்தலில்

Sunday, March 15, 2015

புலன் மருவி

நுட்பச் செதில்
செவி மருவி
ஒலித்துகள் காண
கூர் விழியும்
குழையாய் விளங்க
ஓசையும் பார்வையும்
முயங்கி விரவ
கேளலும் காணலும்
இணங்கி இணைய
முப்புலம் ஒருங்கே
உள் ஆழம் புனைந்து
அகத்தின் புலனாய்
நீளும் வீணில்
சருகின் உயிராய்
கூம்பும் காதும்
கண் எனச் சிறுத்து

Sunday, March 1, 2015

விதியாய் நினைவும்

நிகர் சமன் பெற்றிருக்க
பல்லாயிரம் கிளவியும்
இச்சூத்திரம் கொண்டதறிந்து
புலன்சார் புவியின்
அழுத்தம் மேல் மிகத் தணிய
உயிர் மிகச் சேர்ந்து
மெய் மிக பாரித்து
எச்சம் எனவும் முற்று எனவும்
விதி வகுத்தும் பகுத்தும் கோர்த்தும்
விரிக்கின் வரி நீளும் ஒலிப்படுத்தி
உவர்ப்பதாங்கு ஒளியின் தூரிகையில்
மீட்டும் துறையின் பான்மை
சொல் சருக்கம் புரிந்தமைந்து
வியங்கும் அளவையும் காலமிலதாய்
சமயம் அழியும் நிலவுதலில்
வழமை பாரா நியதியும்
நினைவும் ஓர்மையும் புகுந்து கூராக்க

Tuesday, February 24, 2015

பேருருவச் சித்திரம்

பெரும் பாதம் பதிய
மலை முகட்டு சிரத்தை
அசைத்து குனியும்
பல்லாயிரத்து உயிர்
கடுகு சிறுத்த உணவும்
உள்ளங்களை நீளலும்
காணாத அகல்வாய்
பிளந்து கல்உருளும்
ஓசையில் எயிறும் சேர
உறக்கம் கனிய
ஊர்ந்து சரிய
கருநிழல் அண்டத்தில் வீழ
பகுதியாய் உள்ளொளியில்
உருவும் விளக்கம் பெறாது
ஒற்றை நிமிரலில்
கிரகங்கள் தாண்ட
பாறை நகரும்
சாயை விளம்பும் மாயத்தில்

                       உகிர் ஒன்று மரமானதாய்
                       என்பும் உயர் கோபுரமாய்
                       தொகுக்கும் சான்றுகள்
                       திகிரியின் அடுக்கமாய்
                       பிழைத்தது எச்சமாய்
                       சுருங்கியது குணத்தினதாய்
                       அரவமும் பேச்சாய்
                       விடமும் சிந்தையாய்

Sunday, January 4, 2015

முள் நிறமிழந்து

முள்ளின் நிறமும்
மலரின் மணமும்
கோரிப் பெற்றன
மகிழ்வின் மணத்தை
நேசத்தின் குணத்தை
பரிவின் நுகர்வை
பெரும் ஒலிகொண்டு
மீட்டிட இனத்தின்
பான்மை சொல்லும்
பொருளில் அல்லாது
இனிமையில் நிகழ்ந்து
புலன் யாவும்
ஈர்த்ததாய் விளம்பி
மானத்தின் நுனியில்
அற்றமும் கவிழ்ந்து

Sunday, December 21, 2014

வெப்பம் சூழ்ஆழம்

கோளத்தின் உரு
பெருவெப்பம் சூழ்ஆழம்
தனிக்குவியம் எரியும்
நீர்மத்தின் கலவை
குணம் கூடி வழிய
திசை ஏதும் இன்றி
பரவும் திரவமாய்
குகையின் வழி துளை
கொண்டு பறக்க
வான் கடந்து வகை
பெற்று மீண்டு நீள
அந்தமில் லோகம் என
இடம் முற்றாக
ஆதியின் காலமாய்
விசும்பு வருடும் வளி
போற்றும் நெறியாக
அலை மூலம் தெளிவித்து
தொலை நிகழ் புரிவதாய்
கூர்ந்து வியங்குறு
வழியும் கூறாய்
இணைந்து பயில

Sunday, December 14, 2014

இசை எல்லை எனும் ஆக்கம்

நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்

Sunday, December 7, 2014

பதம் விளைந்த கவி

சொல் உண்டு
ஊண் எழுதி
எயிற்றின் கடையில்
தான் எனச் சிக்கி
விரல் ஊடாய் ஒளியும்
பிரித்தது நீர்மமோ நிறமோ
குருதி கனத்து வழிய
பதிந்தது சுவடியில்
எண்ணாயிரம் எழுத்தாயிரம்
கண்ணும் மயக்கி
உருவென கொண்டு
திணைசார் விருந்தாய்
திகட்டா அலகுடன்
தூற்றா பொருளில்
வேட்டலம் பாய
தறிவிடுத்து கோர்வையில்
நிலைமாறி விதந்து
வினைமேவும் காலை
சுயமும் மோகித்து
சுகமாய் பாவித்து
பேச்சும் இன்றி
முழு சிந்தையும் பயின்று
உறியப் பெற்றது
சக்கையினும் கீழாய்
சரிந்திட்ட பதமென
காணும் ஓர் கவியில்

Sunday, November 30, 2014

வனம் சிலிர்க்கும்

கூர்வேனில் குத்தும் தணல்
வெண்மதி தொடரும் பின்னந்தி
முகில் நிழல் மறைக்கும் பாதை
செவ்வண்டு இசை ஒலிக்கும்
பாதை துவளும் கொடியும் நுடங்கி
இலையும் உதிர்ந்து சலசலக்க
முயல் துள்ளி மரம் புகும்
கோண்மா நதி பாய்ந்து தளர
மின்னலென ஒளிரும் அணங்காய்
கிளை தாவி கூவென கூவ
அதிரும் பட்சியும் அடங்கி குமுற
சில்லென்னும் வளியும் பெயர
கானமும் செவியுறாது முடங்க
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்து

Sunday, November 23, 2014

உயிர் நிகழும் பருவம்

முற்றத்து நெடிதுயர்ந்து
கிளை பரப்பி நீள
செம்மலர் வளர் பருவம்
நகைத்து முரணாக்கி
தளிர் இலை சொறிந்து
விடுதலை யுணர்த்தி
செப்பும் அலையில்
வளி மீதுலாவி
இடர் அறிந்து
அகத்தின் வாசம்
மெல்லியதாய் பகிர்ந்து
இளம் முறுவல் அறிய
முகம் யாதென்று
காணா வளைவில்
படிந்தது குணம்
பச்சையின் இயல்பாய்
இரவில் செழித்து
ஒளியில் செறிந்து
எண்கோடி அணுவும்
மண் பிரிந்த நீராய்
வேரின் பிடிப்பில்
நிலைத்திருப்பதாய்
நகரும் கனவும்
உய்விப்பதாய்
அடரும் கானகம்
விருப்பின் புள்ளியாய்
வான் மறைத்து
இருளின் துணையுற்று
முளைத்த கணம்
இதுவென் திளைக்க

ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.

Monday, November 3, 2014

புள்ளின் அசைவு

மண்ணில் புதைந்த
சிரத்தை மீட்டு
வானின் மையத்தை
தேடும் அலகுடன்
சிறுமென் நடைநடந்து
துள்ளும் மீனைக்கவ்வி
இயல்பென் ஆக்கத்தில்
தம்மையும் இணைத்து
மேகத்தின் அசைவதனை
மெய்யில் ஏற்றி
தன்னில் பிரிந்த
தனதின் நிழலும்
விசும்பில் படிந்ததாய்
வினை பயின்று
தானும் தன் பிம்பமும்
பரிமாண வெளியில்
அலையும் பேற்றினை
வடிப்பதனை பாவை
இயற்றும் திறம்யாதென
புள்ளின் மொழியில்
பெயர்த்து புகல்வதும்
பொருளின் சான்று
எனவே கிளைத்து
வரித்தது இங்கண்

Sunday, October 26, 2014

உம் எனும் ஓசைத்துளி

ஓர் பொருள் ஓர் நிறை
பாவின் உள்ளில்
ஊற்றெடுக்கும்
கவியின் கலி

ஓர்மையில் சிரத்தையும்
மேலாய் கீழாய்
இடமாய் வலமாய்
அசைத்தும் நகர்த்தும்
சொல் விளையாட்டு
என குறுக

உறக்கமும் மேவிடாது
இரையும் ஆட்டுவித்து
கிடக்கை அறிவிக்கும்
பூனையின் மெல்லொலி

சிறு பூவும் மலர
மகரந்த விதியின்
செறித்தலோடு ரீங்கரிக்கும்
மென்பொன் வண்டாய்
உருவகித்து

சலிக்கும் பொருண்மை
யாவும் சலித்து
மரபின் உசாப்பு
தவிர்த்து இலங்கி
இங்கு அளபெடையில்
வரிந்திருக்கும் ஓசைத்துளி

Monday, October 6, 2014

நீதியின் செலவாய்...

சருமத்து மீட்டிய
சுகித்து முயங்கும்
கருவியின் சிணுங்கலில்
எதிர் முனை குவியும்
தன் நயப்பை வழிய
உறியும் எண்கணித
வாய்ப்பாடும் தடைபட
கேளலும் களிப்பாய்
சொன்மையும் உள்சுழிப்பாய்
இன்கண் என்றே ஒலித்து
ஆட்டம் துவங்கி
உச்சத்தின் இறுதிவரை
சொப்பன உயவில்
உள்ளின் உள்ளில்
மானத்தை மீட்காத
வலியின் நுகர்சாயல்
ரூபத்தின் பிளவதனை
தவிர்த்து விலக்கி
பொய்யன்ன புனையும்
போகச் சருக்கம்
நீதியின் செலவாய்
தீர்த்தலில் மிகும்

Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்