Sunday, October 14, 2012
ஏட்டை விலக்கி
குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்
குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்
ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்
Sunday, September 9, 2012
எம்மையும் உம்மையும்
உன்
ஒரு முகத்தின்
பாரா கணத்தில்
நிலைகொள்
இடும்பையோடு
பிரியும்
வளைவாய்
நெடுக
நீரின் நிறம்
என்
உரு அகத்தின்
புரியும் தருணத்தில்
அலையும்
களித்துயிலில்
சேரும்
பரப்பாய்
குறுக
குருதி வண்ணம்
நின்
சிறுபுறத்தின்
சிதறா காலத்தில்
கலையும்
உழந்து
கலப்புடன்
மையத்தில்
பொழியும் நிறமற்று
எம்
பெரு வெளியின்
குவிந்த பொழுதில்
இரங்கலில்
குழைவாய்
கிடையில்
விளிம்பில்
நாறி சாயமற்று
Sunday, September 2, 2012
தொடரல்
நீல வண்ணத்தி
தேன் கவர்ந்து
மலைமுகட்டில் உயரே
பறந்து படபடத்து
மகிழும் சேதி
கோர்க்க தருவின்
நிழல் கூடியமரத்து
பொன் வண்ண அரவும்
ஊறி மொட்டின்
வாசம் முகர
விடத்தின் காற்று
விரட்டியது சிற்றுயிரை
பூத்தேடி தளிர்நாடி
மெல்லிதழ் நடுங்க
நீலக்கமலம் புக
மலர் நுகர்ந்து
பேரின்பம் பெற்றிடவே
குளம் கண்டு
பாம்பும் தொடர
நீருள் மூழ்கி
தாமரை வேர்
பின்னி தளரும்
மூச்சை நிறுத்தி
Sunday, August 26, 2012
அகம் கொள் பொருள்
வண்ணத்தி நீள் பறந்து துடித்து
அமரும் ஆங்கே. சேதியும்
மறைத்து. எவ்வகை திறக்கும்
மறைபொருள் அறிய. திறம்
கொள் புலனும் கையறு காட்டி.
தவம் தரு ஞானம் ஒரு வழிசுட்டி.
பாறை இடுக்கில்
புலர்ந்த மொட்டை
பறித்து தேனும்
சொறிந்த அகமாய்
செறிந்த குருவிடத்து
சேவித்த தருணம்
வண்ணத்தி நிறம் புரிந்தது:மண்ணென்று
வடிவம் தரித்தது:ரௌத்ரமாய்
நிலைத்தது:நீரின் இடத்து
இணைக்கும் பொருளின் சேர்க்கை:
மண் பெரும் ரௌத்ரம் நீராய் மாறுமோ....
மாறியது நிலமும் ஆடி
கொண்டது பேரலையாய்....
Monday, August 20, 2012
களிமிகு நடம்
பாவைக் கூத்தும்
காண வந்ததில்
அரவும் ஒன்று
ஆங்கே கவர்ந்துற்று
தானும் நடமிட
ஆவல் கொண்டே
பிளந்த வாயில்
மெல்லென கவ்வி
பேதையை விழுங்க
ஆட்டம் குலையா
உடம்போடு பாம்பும்
களிமிகு தாண்டவம்
கடந்து கூட
தன்மதி மறந்து
கூத்தில் பொங்க
சீறும் நாகம்
வீசிய மலர்க்கொடி
ஆடும் நடனம்
சர்ப்பமாய் மாறி
பதுமையின் உயிரில்
ஊறும் விடம்
Sunday, August 12, 2012
விடம் கண்டு
வண்ணத்தி பறந்து படபடத்து சுற்றும் எம்மை.
இன்பமும் துன்பமும் கண்டு நிறம் மறைந்து கூடுமது.
எம்மில் நுடங்கும் எம்மில் துவளும். எம்மில் மீளும். கனவிலும் நிறைக்கும்.
அன்றும் ஓர் இரவில் விடம் கொண்ட சிறுபறவையாய் இனம் மாறி எம்மை தீண்ட.
கொடும் வலி கூடும் நாளில் கொல்லும் திறமறிந்தும் கொய்யா உயிரை பேணும் யாம்.
குலம் பெருக்கி கோட்டையில் துலங்கும் அது.
நஞ்சின் கடுமை வாட்ட இன்னல் தாக்க குலைவோம் யாம்.
சிற்றுயிரில் சிறுத்து தன் ஆலின் பெருமை கூவி கிளரும் அது.
எம்முன் நேசம் காட்டி தன்னலம் நாடி ஏமப்பு கொள்ளும்.
பிணி பொறுத்து பிழை பொறுத்து வதை பல கண்டு வாட்டமுற்று சாத்துயருற்றும் உயிர் போக்கும் மந்திரம் தானறியோம் யாம்.
எம்மை பிளந்து பெரும் யோகம் திறம் காண விருப்புறும் அது.
இழி பிறப்பு தனை வியந்து போற்றும் நகை கொண்டோம்.
சுருக்கி உடையும் உள்ளமதை தேரும் வழி கண்டோம்.
திருவின் நிறையில் பொலிவிக்க திருவுளம் பெற்றே.
Sunday, July 22, 2012
அவள்-அவன்-அவை
அவள்
கோள் மாறி கோள் நிலைத்து
பாரில் துயருற்று புறஞ்சேரும்
நேசம் எனும் பேரச்சம்
புகல்ந்த பிரிவதனை தேறா
புலனுணர் வினை தவறி
இருத்தும் கொடுமையில்
விடுபடா மோனம் விண்
சேர்ந்து முட்டும் மீனை
ஈர்க்கும் ஒளிக்கணமாய்
இன்னும் மரிக்கும் காலத்தில்
நிகழ்வதோ உடம்போடு
பெயர்ந்த விருப்பின் நிலை
அவன்
முரசும் கொட்டி எல்லை
பெருக்கும் ஞாலம் தனை
கட்டி கையில் கொணரும்
புஜபலம் மீட்டு புதிர்
பாவும் பகை பொருது
மலை கடல் கடந்து
பொங்கும் வாகையை
அணியிழை பாதம்
கொட்டி வேட்கையில்
தனி நீராடி தாங்கொணா
உற்றும் உறவும் பெற்று
நிற்பதோ நெடுவெண் கொற்றம்
அவை
உயிரும் துலக்கமுற்று
புல்லும் புள்ளும் மாவும்
ஆவும் ஓர் நிறையாய்
நிலம் தேர்ந்து நிற்க
வளியில் கலக்கும்
பொருளிலா நுவல்தல்
தனையதை மந்திரத்தில்
மிகையிட்டு மெய்மிக
வுண்டாம் இடைக்கோட்டு
செயலதில் இகம்
எனும் பரம் கண்விதுப்
பழிந்து நெறியெனதானதே
Subscribe to:
Posts (Atom)