Sunday, May 11, 2014

தகிக்கும்...

நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று

Sunday, April 20, 2014

சித்திரம் தாங்கி

புலன் வகையும்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ

நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்

வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்

பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்

Sunday, March 2, 2014

கேளா பாடல்

பச்சை வாசம் படர்ந்தாங்கு
குளிர் கடுக்கும் மேகத் துணுக்கின்
ஊடே பெருகும் ஓசை ஒன்று
இனிமையும் தனிமையும் ஒருங்கே
சமைந்த அருவியின் கொட்டுதலாய்
இலைகளின் இடுக்கில் நுழைந்து
பழச்சோலைகளில் பதுங்கிப் பரந்து
தெவிட்டா கானமாய் தொலைவில்
ஒலிக்கும் தேமதுரத் தெள்ளமுதாய்
மேலேறும் உச்சம் வான் உயரம்
வளியில் பூக்கும் கோலமென
கீழிறங்கும் சரளம் நீரின் தண்மையன்ன
சலசலத்து சுழிக்கும் நதியாய்
வனம் நிரம்பும் குறிப்போடு
வர்ணத்தின் ஜாலமாய் சுகமதில்
இணைந்து துயில் கொள்ளும் செவியினில்
கேளா பாடல் குவிமதி இசையாக

Sunday, February 23, 2014

நிகரின்மை

சிரம் பிளக்க வலி உடைத்து
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை

Sunday, February 9, 2014

ஓர் பொறி நகும்

பொறி இயங்கும்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்

Sunday, January 26, 2014

வயங்கும் பருவங்கள்

பவளப் பருவம்

வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது

அந்தருவப் பருவம்

பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்

உணர் பருவம்

பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து

புனர் பருவம்

மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்

புதை பருவம்

கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்


மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.

Thursday, January 9, 2014

அகம் மற்றும் ஒரு முகம்

வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே