Sunday, March 15, 2015

புலன் மருவி

நுட்பச் செதில்
செவி மருவி
ஒலித்துகள் காண
கூர் விழியும்
குழையாய் விளங்க
ஓசையும் பார்வையும்
முயங்கி விரவ
கேளலும் காணலும்
இணங்கி இணைய
முப்புலம் ஒருங்கே
உள் ஆழம் புனைந்து
அகத்தின் புலனாய்
நீளும் வீணில்
சருகின் உயிராய்
கூம்பும் காதும்
கண் எனச் சிறுத்து

Sunday, March 1, 2015

விதியாய் நினைவும்

நிகர் சமன் பெற்றிருக்க
பல்லாயிரம் கிளவியும்
இச்சூத்திரம் கொண்டதறிந்து
புலன்சார் புவியின்
அழுத்தம் மேல் மிகத் தணிய
உயிர் மிகச் சேர்ந்து
மெய் மிக பாரித்து
எச்சம் எனவும் முற்று எனவும்
விதி வகுத்தும் பகுத்தும் கோர்த்தும்
விரிக்கின் வரி நீளும் ஒலிப்படுத்தி
உவர்ப்பதாங்கு ஒளியின் தூரிகையில்
மீட்டும் துறையின் பான்மை
சொல் சருக்கம் புரிந்தமைந்து
வியங்கும் அளவையும் காலமிலதாய்
சமயம் அழியும் நிலவுதலில்
வழமை பாரா நியதியும்
நினைவும் ஓர்மையும் புகுந்து கூராக்க

Tuesday, February 24, 2015

பேருருவச் சித்திரம்

பெரும் பாதம் பதிய
மலை முகட்டு சிரத்தை
அசைத்து குனியும்
பல்லாயிரத்து உயிர்
கடுகு சிறுத்த உணவும்
உள்ளங்களை நீளலும்
காணாத அகல்வாய்
பிளந்து கல்உருளும்
ஓசையில் எயிறும் சேர
உறக்கம் கனிய
ஊர்ந்து சரிய
கருநிழல் அண்டத்தில் வீழ
பகுதியாய் உள்ளொளியில்
உருவும் விளக்கம் பெறாது
ஒற்றை நிமிரலில்
கிரகங்கள் தாண்ட
பாறை நகரும்
சாயை விளம்பும் மாயத்தில்

                       உகிர் ஒன்று மரமானதாய்
                       என்பும் உயர் கோபுரமாய்
                       தொகுக்கும் சான்றுகள்
                       திகிரியின் அடுக்கமாய்
                       பிழைத்தது எச்சமாய்
                       சுருங்கியது குணத்தினதாய்
                       அரவமும் பேச்சாய்
                       விடமும் சிந்தையாய்

Sunday, January 4, 2015

முள் நிறமிழந்து

முள்ளின் நிறமும்
மலரின் மணமும்
கோரிப் பெற்றன
மகிழ்வின் மணத்தை
நேசத்தின் குணத்தை
பரிவின் நுகர்வை
பெரும் ஒலிகொண்டு
மீட்டிட இனத்தின்
பான்மை சொல்லும்
பொருளில் அல்லாது
இனிமையில் நிகழ்ந்து
புலன் யாவும்
ஈர்த்ததாய் விளம்பி
மானத்தின் நுனியில்
அற்றமும் கவிழ்ந்து

Sunday, December 21, 2014

வெப்பம் சூழ்ஆழம்

கோளத்தின் உரு
பெருவெப்பம் சூழ்ஆழம்
தனிக்குவியம் எரியும்
நீர்மத்தின் கலவை
குணம் கூடி வழிய
திசை ஏதும் இன்றி
பரவும் திரவமாய்
குகையின் வழி துளை
கொண்டு பறக்க
வான் கடந்து வகை
பெற்று மீண்டு நீள
அந்தமில் லோகம் என
இடம் முற்றாக
ஆதியின் காலமாய்
விசும்பு வருடும் வளி
போற்றும் நெறியாக
அலை மூலம் தெளிவித்து
தொலை நிகழ் புரிவதாய்
கூர்ந்து வியங்குறு
வழியும் கூறாய்
இணைந்து பயில

Sunday, December 14, 2014

இசை எல்லை எனும் ஆக்கம்

நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்

Sunday, December 7, 2014

பதம் விளைந்த கவி

சொல் உண்டு
ஊண் எழுதி
எயிற்றின் கடையில்
தான் எனச் சிக்கி
விரல் ஊடாய் ஒளியும்
பிரித்தது நீர்மமோ நிறமோ
குருதி கனத்து வழிய
பதிந்தது சுவடியில்
எண்ணாயிரம் எழுத்தாயிரம்
கண்ணும் மயக்கி
உருவென கொண்டு
திணைசார் விருந்தாய்
திகட்டா அலகுடன்
தூற்றா பொருளில்
வேட்டலம் பாய
தறிவிடுத்து கோர்வையில்
நிலைமாறி விதந்து
வினைமேவும் காலை
சுயமும் மோகித்து
சுகமாய் பாவித்து
பேச்சும் இன்றி
முழு சிந்தையும் பயின்று
உறியப் பெற்றது
சக்கையினும் கீழாய்
சரிந்திட்ட பதமென
காணும் ஓர் கவியில்