Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்

Sunday, September 14, 2014

குமிழி

குமிழியும் பறக்க இடைவிடாது
வளியின் வழியில் தொடர
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்

நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து
கண்ணின் உள்விழி என மாறி
உள் கவிந்து கலக்கும்

உமிழும் நீரில் ஓரு குமிழி
உள்ளின் சொல்லாய் கிளம்பி
வெளியின் வளியாய் உள்புகுந்து
உண்ணும் இன்மையின் பொருளென

Sunday, September 7, 2014

ஞாயிறும் பிறக்க

அருகா மருங்கில்
அவ்விரி அக்கதிர்
அச்சிறு அம்பலம்
அகலும்

இருள் ஒழியும்
இத்திற நிறத்தின்
இவ்வையகத்தில்
இருந்தவம்

உச்சியில் நிலவும்
உயிர் உருக்கும்
உவப்பில் சிவக்கும்
உரத்தில்

எழும் பகல்
எழும்நிறை
எருவாய்
எரியும்

ஐம்புனல் ஓதும்
ஐயங்காண்
ஐம்புவனத்து
ஐவனத்தில்

ஒளியின் ஓர் கீற்று
ஒற்றை வானில்
ஒருமை காண்
ஒருங்கண்

Sunday, August 31, 2014

நெறி வழி

பசுமை அடர் குழைவும்
உருவிச் சேரும்
இலையதில்

பொன்பூசி வளைந்ததில்
பதியும் வடிவாய்
மலரதில்

நீன்மை வளமார்ந்து
ஒழுகிப் பெருக
விசும்பதில்

அழலும் பொரிந்து
விடிந்து பரவ
ஞாயிறதில்

புகையும் கவிந்து
உள்ளில் கலக்க
இரவதில்

குளிரும் அடங்கும்
இதமும் பெயர்ந்து
புலமதில்

பவளம் நாண
பாயும் திறமாய்
குருதியதில்

நுரையாய் மிதக்கும்
சகலமும் பெருகிய
மதியதில்

சாம்பலும் துவரியும்
துகளாய்ச் சேரும்
நெறியதில்

Monday, August 25, 2014

வீணில் உடல்

தோயும் உடல்
தனித்தென பிரிய
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு
சுற்றும் வட்டமாய்
நீரும் குருதியும் கலந்து
நீர்த்தலாய் வழிய
ஓர்மையும் சரிதமும்
பிணங்கிக் கூட
பிளவுற்ற புலன்
நிரக்கமாய் சமைய
இடையில் ஊடாடும்
மூதின் பருவம் என
கடக்க மறுத்து
துடிப்பில் சில்லென்
சிலிர்ப்பும் வடிந்து
பெயர்த்துச் சிதறிய
இரு கூறென கண்டு
கவின் கரைந்து
இளகும் நிணமென
பிம்பமும் பொலிய
நகைப்பின் சித்திரமாய்
கோரச் செண்டும்
இதழ் பிய்ந்து குதற
ஞானம் செப்பும் சிமிழாய்
துலங்கும் வீணில்

Sunday, July 27, 2014

யாமற்றது

எம்மை ஞாலத்தின் மீதமர்த்தி
வரித்துச் செப்பிய உருக்கோளமாய்
மையத்து தொகுப்பிலும் மிதந்து
உணர் இழை நீண்டு அண்டம் சுருட்ட
உலகு தாங்கிய பாரம் காணாது
அரற்றும் ஆங்கொருவன் மிரண்டு
பால்வெளியும் கடந்து ஒளியும்
பீறிட்ட சிறுதுளை வழி பயணித்து
பாதம் எட்டும் மீனில் பதிந்து
விண்வரைவாய் வேகம் கொண்டு
கதிர் தாண்டி சூளும் துகள் மீண்டு
பல் சராசரங்கள் உள் கவர்ந்து
பருமளவின் பரிமாணத்தகலத்து
பரவி பெருகி விரிந்து அகண்டு
பற்றிழையில் யாம் கரைந்தும்
நிரப்புவித்தும் நிறைந்தும் நிலாவியும்
ஒர் குமிழில் அடைபட்டு பிளவுற்றும்
எம்மில் இருமையாய் பன்மையாய் விளைய
                           பிறக்கும் எழுத்தும்
தோன்றும் எண்ணும்
அறியாத இயலின்
அடையாளதிதல் ஒன்றாய்
வேறாய் பலதாய்
எம்மை வனைந்து
எம்மை புனைந்து
யாம் மறைந்த பிறிதின்
திரிபுற்று பொருள்
வழியை நவில்ந்து
  தொடர் பெயர் சுட்டும்
கோர்த்து விதியும்
எச்சமாய் வகுத்து
வினையும் செயல்பட
அறிந்திரா நன்மொழியில்
யாம் வடிந்திட
                          எம்முள் அந்நியமாய்
ஒதுங்கும் யார்
இச்சொல் நிகண்டை
தருக்கிச் சேர்ப்பது
என துருவத்தின் முனையிலும்
புரளும் காலத்தின் முடிவிலும்
வினாவ எம்மில்
காணா விடையும்
எம்மின் பதிலியாய்
  முதிரும் யாமற்றது

Sunday, July 20, 2014

அன்றியும் பரிமாணம் நிகர்த்து

யாதொரு பிம்பம் என்றே
ஆய்ந்ததில் முப்பரிமாண
அடையாள பிரதிமை
எனவும் இடமாற்ற
வியாபிப்பில் பரிமளிப்பது
எனவே தெருள
தன்முன் பிறிது எனும்
பொருள் கணச் சேர்க்கையில்
வியாசம் வழுவ அலகாக
அயல் நிகர் அப்பால் நிகழ்
வெளிச் செருகல் எதுவும்
சிறுதுகள் வேதிக் கலப்பில்
இயல்வதாய் பண்புற
இகத்திலும் பரத்திலும்
மெய் இயற்றும் புனைவாய்
கமழும் கூடின் வசம்
திகையும் கற்றையின்
பான்மை திளைக்கும்
இருப்பென்றும் இன்மையென்றும்
தலைகீழ் விகிதமாய் எடைகூடி
அணுவின் பிளவில் மொய்ம்புற்று
தேகமாய் பின்னலாய் கொடியாய்
பிரிவதுவும் இணைவதுவும்
இன்னினது பெயர் வரையா
புலன் பாவிக்கும் புலம்