Sunday, October 26, 2014

உம் எனும் ஓசைத்துளி

ஓர் பொருள் ஓர் நிறை
பாவின் உள்ளில்
ஊற்றெடுக்கும்
கவியின் கலி

ஓர்மையில் சிரத்தையும்
மேலாய் கீழாய்
இடமாய் வலமாய்
அசைத்தும் நகர்த்தும்
சொல் விளையாட்டு
என குறுக

உறக்கமும் மேவிடாது
இரையும் ஆட்டுவித்து
கிடக்கை அறிவிக்கும்
பூனையின் மெல்லொலி

சிறு பூவும் மலர
மகரந்த விதியின்
செறித்தலோடு ரீங்கரிக்கும்
மென்பொன் வண்டாய்
உருவகித்து

சலிக்கும் பொருண்மை
யாவும் சலித்து
மரபின் உசாப்பு
தவிர்த்து இலங்கி
இங்கு அளபெடையில்
வரிந்திருக்கும் ஓசைத்துளி

Monday, October 6, 2014

நீதியின் செலவாய்...

சருமத்து மீட்டிய
சுகித்து முயங்கும்
கருவியின் சிணுங்கலில்
எதிர் முனை குவியும்
தன் நயப்பை வழிய
உறியும் எண்கணித
வாய்ப்பாடும் தடைபட
கேளலும் களிப்பாய்
சொன்மையும் உள்சுழிப்பாய்
இன்கண் என்றே ஒலித்து
ஆட்டம் துவங்கி
உச்சத்தின் இறுதிவரை
சொப்பன உயவில்
உள்ளின் உள்ளில்
மானத்தை மீட்காத
வலியின் நுகர்சாயல்
ரூபத்தின் பிளவதனை
தவிர்த்து விலக்கி
பொய்யன்ன புனையும்
போகச் சருக்கம்
நீதியின் செலவாய்
தீர்த்தலில் மிகும்

Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்

Sunday, September 14, 2014

குமிழி

குமிழியும் பறக்க இடைவிடாது
வளியின் வழியில் தொடர
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்

நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து
கண்ணின் உள்விழி என மாறி
உள் கவிந்து கலக்கும்

உமிழும் நீரில் ஓரு குமிழி
உள்ளின் சொல்லாய் கிளம்பி
வெளியின் வளியாய் உள்புகுந்து
உண்ணும் இன்மையின் பொருளென

Sunday, September 7, 2014

ஞாயிறும் பிறக்க

அருகா மருங்கில்
அவ்விரி அக்கதிர்
அச்சிறு அம்பலம்
அகலும்

இருள் ஒழியும்
இத்திற நிறத்தின்
இவ்வையகத்தில்
இருந்தவம்

உச்சியில் நிலவும்
உயிர் உருக்கும்
உவப்பில் சிவக்கும்
உரத்தில்

எழும் பகல்
எழும்நிறை
எருவாய்
எரியும்

ஐம்புனல் ஓதும்
ஐயங்காண்
ஐம்புவனத்து
ஐவனத்தில்

ஒளியின் ஓர் கீற்று
ஒற்றை வானில்
ஒருமை காண்
ஒருங்கண்

Sunday, August 31, 2014

நெறி வழி

பசுமை அடர் குழைவும்
உருவிச் சேரும்
இலையதில்

பொன்பூசி வளைந்ததில்
பதியும் வடிவாய்
மலரதில்

நீன்மை வளமார்ந்து
ஒழுகிப் பெருக
விசும்பதில்

அழலும் பொரிந்து
விடிந்து பரவ
ஞாயிறதில்

புகையும் கவிந்து
உள்ளில் கலக்க
இரவதில்

குளிரும் அடங்கும்
இதமும் பெயர்ந்து
புலமதில்

பவளம் நாண
பாயும் திறமாய்
குருதியதில்

நுரையாய் மிதக்கும்
சகலமும் பெருகிய
மதியதில்

சாம்பலும் துவரியும்
துகளாய்ச் சேரும்
நெறியதில்

Monday, August 25, 2014

வீணில் உடல்

தோயும் உடல்
தனித்தென பிரிய
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு
சுற்றும் வட்டமாய்
நீரும் குருதியும் கலந்து
நீர்த்தலாய் வழிய
ஓர்மையும் சரிதமும்
பிணங்கிக் கூட
பிளவுற்ற புலன்
நிரக்கமாய் சமைய
இடையில் ஊடாடும்
மூதின் பருவம் என
கடக்க மறுத்து
துடிப்பில் சில்லென்
சிலிர்ப்பும் வடிந்து
பெயர்த்துச் சிதறிய
இரு கூறென கண்டு
கவின் கரைந்து
இளகும் நிணமென
பிம்பமும் பொலிய
நகைப்பின் சித்திரமாய்
கோரச் செண்டும்
இதழ் பிய்ந்து குதற
ஞானம் செப்பும் சிமிழாய்
துலங்கும் வீணில்