Sunday, February 24, 2013

விழியின் விழி


பனிசூழும் காற்று குத்தும் குளிராய்
மெல்லிதழ் வருடி வாட
விழி கொள் பார்வை
புலன் கடிந்து நுடங்க
இசை முகிழும் அகம்
தனிப்பெரும் தகிப்பின் வாசமாய்
புலவும் நிலை கூறி
புறம் நிற்கும் கழிப்பாய்
தறிகெட்ட விசையென அறிவின் இயல்பாய்
இருள் உலகும் நகைத்து
ஒளி புகா படலத்தில்
ஊர்ந்து பாய
செவியும் ஈருணர்
வகை போல் தகவுகொண்டு
தொட்டும் நுகர்ந்தும்
வடிவமாய் வரைய
வண்ணங்களற்று உவர்ப்பின் சுவையாய்
கதிர் வீசும் கனத்துடன்
யாவரும் நிறையும்
கலன் அன்ன சிரத்தை
தாங்கி தானாய் ஏந்தி
நீர் நிறை ஞாலத்தில்
படரவும் விட்டு புகலும் கூற்றாய்
சேருமோ கண் எனும் பிணி

Sunday, December 23, 2012

காயம்


வாளும் கீறிய
ஆடிப் பிம்பம்
மறைந்தது நீரில்
தளும்பலாய்
சேரும் கணம்
உடைந்த நுனி
உயிர் மாற்றி
காயமும் உடலில்
கரைந்தது மெய்யாய்

Sunday, December 9, 2012

பல்லுயிர்க் கனா


முற்றத்தில் முளைத்தன
பலவர்ணப் புழுவும்
வெடித்தது ஒன்று
காளை முகம் கொண்டு
நகைத்தது நரியின்
திறத்தில் தன்னிலை
தான் அழித்து
நிமிர்ந்தது மந்தியாய்
சதியும் புனைந்து
சிங்கத்தின் பிடரிபெற்று
ஓலமிட்டது கடுவன்
குரலில் கூவென்று
வாலில் நஞ்சும்
பொழிந்து அனலாய்
இச்சை கொள்ளா
மகளின் சேவகத்தில்
நன்றல்லது நன்றாய்
நயமுடன் பயக்கும்
ஆவென் உள்ளம்

Sunday, December 2, 2012

கொடுவரி


செவியில் ஓர் வரி
வளைந்து
நுதலில் மறுவரி
சேர்ந்து
ஒலிகேட்டு உயர்த்த
ஓர் வரி இட்டு
கழுத்தில் மூவரி
இணைந்து
புஜமும் பலவரி
கொண்டு
கால்களில் குறுவரி
கோர்த்து
வாலும் நீள்வரி
சுழற்றி
கண்ணும் துளைக்க
கூர்வேலுமாய்
வெகுளி காண் பெருக்கத்தில்
பாய்ந்து
இரைதேடி
கானகத்து நீர்வரியில்

Sunday, November 25, 2012

மீண்டும் எழும்


-தீபிகை தூண்டி கிளம்பிய சுடரில் எழுந்தது பெருநிழல்
-புகையாய் உருப்பெற்று பெரு வடிவெடுத்தது கூளி எனும் நெருப்பு
-உரும் எனும் ஓசை பெருக தகித்தது விசும்பு
-திடும் எனும் ஒலி கொண்டு வெடித்தது நிலன்

அச்சத்தால் குறுகும் பேதை புகை வெளியில் நீண்டு தன் விருப்பும் செப்பினளே

-உயிர்பேணும் ஐயம் வெறுமையாய் போக
-மூச்சும் நிறுத்தும் வேட்கை மடைமாற
-அவாவும் துன்பம் உறவின்றி நீள
-இச்சையும் இனி இவ்வுலகத்து நீக்கமுற

போரெதிர்ந்த வெளியில் இடியன்ன நகையாய் அதிர்ந்து தெய்வம் பற்றியதை கூற

-தசையும் கூழாய் வடியுமோ என்பின் உருவில் நிலைய
-காற்றும் வருடாது தணலும் வேகாது நீரும் தணியாது இருக்க
-அல்லதை நடாத்தி வினை செய்விக்க ஊடாடி
-ஆதியில் விளைந்த அரும்பழத்தை பிசையவே

பால்பொருள் திரிந்த உடல் பெற்று பிரதிமை கலையும் உயிர் கொண்டு துய்த்த மொழி

-பச்சையும் குலையுமோ கானகத்து
-புள்ளும் இணை மறக்குமோ
-மீண்டும் கல்லாய் சமையுமோ
-யுகம் பின் கடந்து வெடிப்பின் முன் சேருமோ

அருளும் தீதும் அறியா தொகை நிலை தன்னில் எழுத்தும் ஒலியும் இன்மையாய்

Sunday, October 28, 2012

விருப்பும் விட்டிலாய் பறக்க


வெள்ளி நீரோடும்
தூயநதியில் வீழ்ந்த
வெண்முல்லை சரமன்ன
அவள் அலையும்
கரையினில்

எயிற்றில் தன்னல பாரம்
கடித்து இழுத்து நகரும்
வேட்கை மன்னர்கள்
கடமையும் புறந்தள்ள
விருப்பும் அகங்கொள்ள
விட்டிலாய் பறக்க

பேதை கொள்ளும் கருணையே
இடரில் புதையும் அனலாய்
பாராமுகம் காட்ட
ஓலம் பெருக்கி ஈர்க்கும்
தன் மக்கள் தன் உடமை
ஓங்கும் பேரவா
பெண்ணும் காயமாய்
சிறுத்தாங்கு புகல

குறுநகையும் வெறுப்புற்று
வதியும் கொடுஞ்சினமும்
வருந்தாத ஆவின் தோலன்ன
புகழ்உடல் பெற்ற மறவர்

பூவும் சொறியும்
அமுதும் பெறா
பேராய் பெற்றிடினில்
இழுக்கும் விசையும்
இயைபற்று சுயம்மறைந்து
தேறாகனவினில் புலரும்
கணம்தனை மறந்து

Sunday, October 14, 2012

ஏட்டை விலக்கி


குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்

குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்

ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்