Sunday, March 4, 2012

கலவா பிறப்பில்


நான்காய் கால்கொண்டே
மென்பாதம் பொருத்தி
அடியும் நிறை காணா
நடைபழகும் ரகசியத்தில்
பூனையுட் புகுந்த அவளும்
புதுப்புனலறிந்து செறியும்
கரம் நீள கால் பாவும்
சிரம் எழ தோள் கடுக்கும்
குரல் மடுக்க நாபுரளும்
நிணம் சுவை கொடுக்கும்
தன்னில் பிரியா அகம் மறுக்கும்
சீராட்டும் உளமோடு
பிரிந்தும் கூடியும் இணையாய்
மரமேறி கீழ்பாயும்
ஆறறிவும் சுருங்கி உவளும்
குணமொத்து தானறியும்
இம்மையின் இரட்டை
மறுமையின் பன்மையாய்
சிறுத்து மடியும் ஊழின்
வினை வழிச் செல்லும்
போதம் அறியா பேடு
மோகம் தவித்து கடுவன்
தேடும் விழா நாளில்
இறுமாந்து துணைகொள்ள
நுகர்தல் போக்கி பற்றும்
விடுத்து யாசகம் செய்யும்
அறமகள் காண் அவ்விலங்கே

Monday, February 27, 2012

கலந்த கலவையாய்


நாயுண் தலையாம் அவளாக
வாய் கொள் சதையில் அதுவாக
குதறும் எயிற்றும் அவளில்
கூரில் மிகவும் அதனில்

உகிர் பற்றும் அவனாக
பிடரி கவரும் அதுவாக
மதில் மயங்கிய அவனில்
நேசப் பொய்யாய் அதனில்

குலைக்கும் அவள் நன்றி பயக்கும் அது
மிழற்றும் அவன் உங்கரிக்கும் அது

பகை கண் காணாமல்
அவளில் அதுவாக
நிலை பெயர்த்து துஞ்சும்
அவனில் அதுவாக

பூனை நிறைக்கும் எழில் பூண்டு
அவள் மறைந்த கானகத்தில்

விதி சோரும் வழியாய் திரண்டு
அவன் இகந்த புலத்தில்

குழவி ஒறுக்கும் புத்தறம்
பூசை கவறிய அவளாய்
உயவின் பெருக்கும் முறையில்
ஞமலி கைவரும் அவனாய்

இனமும் தினம் கண்டு
உயிர் கலக்கும் ஓர்மதி

Sunday, January 22, 2012

வலை இழை


கவ்வி...
கதுவி...
சிக்கி..சிதறி..இடறி...
ஒற்றி..ஒருங்குகூடி...

வலையும் அலையும்
படையும் தடையும்
இணையும் இழையும்

நூலாய்...
திரியாய்...
பின்னி..சுற்றி...முறுக்கி...
கட்டி...கைப்பற்றி...

சிரமும் கொட்டும்
காலும் எட்டும்
இடையும் கட்டும்

ஆலம்...
நீலம்...
கருத்து...சிறுத்து...ஒறுத்து...
பகுத்து...துயருறுத்து...

மனை சுழலும்
இரை தேரும்
நிலை புரக்கும்

விட்டு..
பிடித்து...
பழித்து..
வினைமுடித்து...உமிழ்ந்து
கயிறும் திரித்து...நூல் மையத்து
விழித்து...

Tuesday, January 3, 2012

அன்பின் ஆறாமொழி

'அன்பின் ஆறாமொழி' எனது கவிதைத் தொகுப்பு நூல்.
புத்தகக் கண்காட்சியில் பாலம் பதிப்பகத்தில் கிடைக்கும்.
கடை எண்:145, 146  விலை ரூ.60/-

Monday, November 7, 2011

நூல் வெளியீட்டுப் படங்கள்

என் கவிதைத் தொகுப்பு நூலான 'அன்பின் ஆறாமொழி' நூல் வெளியிட்டில் சில காட்சிகள்:











தினமணி நாளிதழில் வெளியான செய்தி படம் கீழே:




Thursday, November 3, 2011

நூல் வெளியீடு:படங்கள்

என் கவிதைத் தொகுப்பு 'அன்பின் ஆறாமொழி' நூல் வெளியீடு நேற்று நடந்தது.

பாலம் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

கவிதைத் தொகுப்பை எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டார்.
எழுத்தாளர் திரு.ஜமாலன் நூலைப் பெற்றுக்கொண்டார்.
திரு.இந்திரா பார்த்தசாரதி, திரு.ஜமாலன், கல்கி இதழின் துணை ஆசிரியர் திரு. அமிர்தம் சூர்யா நூல் அறிமுகம் செய்தார்கள்.

திரு.அர்விந் அப்பாதுரையின் 'திரு-பூர்வீக-சதிர்' எனும் நாவலை எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். கவிஞர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் நூலை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனும் கவிஞர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியனும் நூலை அறிமுகம் செய்தார்கள்.

இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!


Sunday, October 30, 2011

நூல் வெளியீட்டு விழா

பாலம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு
ICSA புரோகிராம் வளாகம், ஜீவன் ஜோதி பில்டிங்,
107 பாந்தியன் சாலையில் நடைபெற இருக்கிறது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

முபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி பெறுபவர்: ஜமாலன்
நூல் அறிமுகம்: இந்திரா பார்த்தசாரதி, ஜமாலன், அமிர்தம் சூர்யா

அர்விந் அப்பாதுரையின் 'திரு-பூர்வீக-சதிர்' நாவல்
வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன் பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்
நூல் அறிமுகம்: பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன்