Sunday, December 21, 2014

வெப்பம் சூழ்ஆழம்

கோளத்தின் உரு
பெருவெப்பம் சூழ்ஆழம்
தனிக்குவியம் எரியும்
நீர்மத்தின் கலவை
குணம் கூடி வழிய
திசை ஏதும் இன்றி
பரவும் திரவமாய்
குகையின் வழி துளை
கொண்டு பறக்க
வான் கடந்து வகை
பெற்று மீண்டு நீள
அந்தமில் லோகம் என
இடம் முற்றாக
ஆதியின் காலமாய்
விசும்பு வருடும் வளி
போற்றும் நெறியாக
அலை மூலம் தெளிவித்து
தொலை நிகழ் புரிவதாய்
கூர்ந்து வியங்குறு
வழியும் கூறாய்
இணைந்து பயில

Sunday, December 14, 2014

இசை எல்லை எனும் ஆக்கம்

நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்

Sunday, December 7, 2014

பதம் விளைந்த கவி

சொல் உண்டு
ஊண் எழுதி
எயிற்றின் கடையில்
தான் எனச் சிக்கி
விரல் ஊடாய் ஒளியும்
பிரித்தது நீர்மமோ நிறமோ
குருதி கனத்து வழிய
பதிந்தது சுவடியில்
எண்ணாயிரம் எழுத்தாயிரம்
கண்ணும் மயக்கி
உருவென கொண்டு
திணைசார் விருந்தாய்
திகட்டா அலகுடன்
தூற்றா பொருளில்
வேட்டலம் பாய
தறிவிடுத்து கோர்வையில்
நிலைமாறி விதந்து
வினைமேவும் காலை
சுயமும் மோகித்து
சுகமாய் பாவித்து
பேச்சும் இன்றி
முழு சிந்தையும் பயின்று
உறியப் பெற்றது
சக்கையினும் கீழாய்
சரிந்திட்ட பதமென
காணும் ஓர் கவியில்