Sunday, October 28, 2012

விருப்பும் விட்டிலாய் பறக்க


வெள்ளி நீரோடும்
தூயநதியில் வீழ்ந்த
வெண்முல்லை சரமன்ன
அவள் அலையும்
கரையினில்

எயிற்றில் தன்னல பாரம்
கடித்து இழுத்து நகரும்
வேட்கை மன்னர்கள்
கடமையும் புறந்தள்ள
விருப்பும் அகங்கொள்ள
விட்டிலாய் பறக்க

பேதை கொள்ளும் கருணையே
இடரில் புதையும் அனலாய்
பாராமுகம் காட்ட
ஓலம் பெருக்கி ஈர்க்கும்
தன் மக்கள் தன் உடமை
ஓங்கும் பேரவா
பெண்ணும் காயமாய்
சிறுத்தாங்கு புகல

குறுநகையும் வெறுப்புற்று
வதியும் கொடுஞ்சினமும்
வருந்தாத ஆவின் தோலன்ன
புகழ்உடல் பெற்ற மறவர்

பூவும் சொறியும்
அமுதும் பெறா
பேராய் பெற்றிடினில்
இழுக்கும் விசையும்
இயைபற்று சுயம்மறைந்து
தேறாகனவினில் புலரும்
கணம்தனை மறந்து

Sunday, October 14, 2012

ஏட்டை விலக்கி


குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்

குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்

ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்