Tuesday, December 29, 2015

இயல் நிலை

எம்மனதின் ஊஞ்சல் கயிறு பிணைத்திழுத்த சகோரத்தின் கழுத்தில் தடம் பதித்த உருவாய் வலியும் தீரா திக்கில் உதிரும் செண்டின் தோற்றவாய் காணா கிடைத்தொழுக்கம் திரண்ட பதியமதில் முழ்கும் முளைவிடா யோகத்தருணமது உம்மை கொணரும் நுண் புள்ளி வீழுமோ அக்குளத்தின் அங்கணச் சேற்றில் ஆதிவிடம் கரைநிறை முயக்கும் கள்ளோடு தேமதுரச் சாறும் தூது செல்லா வளியின் பின்னே விரைந்தோடும் சக்கரத்து தேர்க்காலில் இட்ட பலாச்சுளை மிஞ்சா தீரத்தில் எம்மை என்புறுவாய் ஆக்கிட்ட இச்சை சொடுக்கும் கணத்தில் தேயும் ஆறலை மெய்யும் வருந்தா தினவோடு உம்மில் அமிழும் கரைசலில் விலகுமோ கோர்வை கொள் உப்புநீர் சொறியும் விழிகோளத்து சேர்வையில் தொலையும் நிழல் விதிரும் இதழ் சேரா மருட்கை அலையும் எமது அவயமறு ஆதாரத்தின் சின்னமாய் சிக்கி கசியா உமது கருங்கல் ஞாலத்தில் பிரியுமோ உளமெனும் சாறும் உயிரெனும் கூடும்.

Monday, September 14, 2015

பெயரிலா நினைவில்

வட்டச் சுழல் ஆடி
வனைந்த குமிழில்
இறகும் புக
ஊசி முனை
வளியும் நுழைய
படபடக்கா சிறகின்
அசைவும் சிரத்தில்
கொண்டு அசைய
வண்ணம் ஒட்டிய
சுவரில் ஒளிவீழ
காப்பும் எடையாய்
மலரா வாசம்
ஈர்க்கும் புலனாய்
வீச்சின் துவர்ப்பில்
இறுகும் விடியும்
கோர்த்த உடனுறை
மௌனம் விரிய
அரிவரி ஆகும் என
அனலிலும் வாடா
குளிரிலும் நடுக்கா
அவ்வமயச் சாத்திரத்தில்
ஓர் சருக்கம் என்றே
புரளும் தற்கூற்று
வேட்டலில் மேன்மையும்
இகத்தின் நற்சான்றாய்
பெயரும் நிறம் கூட்டி

Monday, September 7, 2015

அலகின் வெளி

இரு அலகு
உள் வரிசை
உயரம் நான்கென்று
தொலைவின் வெளியில்
அகன்ற அலை
நீளமும் பலகோடியாய்
பேச்சின் அசை
குறைந்தும் கூடியும்
உற்ற எண்மம்
பெரு வளையம்
ஒன்றாய் மடிந்து
நவ கோள் சுற்றி
பால்வீதியின் புள்ளியாய்
நிலைத்து அடங்க

பல அலகு
புற அடுக்கில்
அகண்டதில்
இரண்டென்று
ஏற்பின் அகத்தின்
பயின்ற தாரை
குறுகிச் சேரும்
சதமானதாய்
மௌனத் தொடர்பில்
நிறைந்தும் பிரிந்தும்
சாற்றிய பதுமம்
சிறு வட்டம்
பெருகி வளைந்து
தனி கிரகமாய்
சிறு அண்ட விசாரத்து
பதறி கலங்க

Sunday, August 30, 2015

இசை பகர்ந்து

துருவத்து மீனும்
கோளின் நிகர்
ஆழத்துளையின்
செம்மை நீளும்
புனல் சேர்ந்த
ஓடை பாய்வதில்
நாவியும் ஓடி
மென்ஒலி இசையும்
பெருக்கெடுத்துப் பகர
வினையாவும்
சமைந்து கூம்ப
பெருங்கனிக் கூட்டம்
தேன் சொரியும்
மலர்ப் பொய்கை
ஈர்க்கும் சுவனத்து
இம்மையின் பெற்றியில்
வேற்றசைவும்
முறுக்கேறி பதிய
சாக்காடு நோகா
துயரத்தில் சார்ந்து
முற்றிடும் கோவை

Sunday, August 16, 2015

நெடிதுயர் கல்லும்

கல்லின் அடுக்கம்
வான் தொட
கோணமும் குவிந்து
உள்கவியும் இருளில்
இரவின் பாய்வாய்
மண்ணும் திணிந்து
நிலனும் திளைத்து
குறுமணல் கூடி
காயத்தின் வடிவாய்
என்பும் பாறையாய்
அசையும் நோற்பில்
படிமையின் வளைவும்
வகையறியா புலனாய்
பலம் வழிந்து
ஆழியின் அடியில்
குத்திட்டு நுழைய
பருவச் சாகரம்
மூழ்கியும் மிதந்தும்
அமிழும் குறுமணியில்
எண்மயம் தாண்டி
வேற்றுச் சுவனத்தில்
ஆதியின் புள்ளியில்
மூதுரைத்து முயலும்
பொய்காணா நிர்மலத்தில்
நீக்கமறும் போக்கு

Monday, April 20, 2015

கானகத்துக் கூட்டம்

நதி வேகம் தாளாது
மானும் குழுவாய்
நீரில் மிதந்து
அளைந்து அணைத்து
நீந்தி புறம் சேர

                                 பெருவெள்ளப் புள்ளியில்
                                 சிக்கி சுழன்ற பிணை
                                  தனித்து தவித்து
                                  தான்மட்டும் கடந்து
                                  வேறு கரை காண

பச்சை கானகத்து
கூட்டம் மறைய
ஈரம் நனைய
ஓசை வந்தடையும்
திசை நோக்கி

                                 அச்சம் தின்று
                                 அலறும் முனைப்பும்
                                 இனம் தேடி
                                 பாயும் பேரரவம்
                                 பதுங்கி ஒடுங்க


தம் இணை பாரா
தளிரும் விருப்புற்று
தயங்கும் தேடலில்
தொடரா வினையோடு
விளையும் வெறுப்பில்

                                  விழி சோர்ந்து
                                  இமை மூடி கனத்து
                                  குரலும் ஓய்ந்து
                                   தாகம் பெருக்கி
                                  ஓடையில் குளிர

எதிர் முனை காட்டும்
துணையின் நிழலில்
துள்ளித் தாவி
இடர் தவிர்த்து
அகம் கொள்ள

                                  கொடுமா பின் வர
                                  அகலவும் இயலா
                                   நிலை நிற்றல்
                                   உயிர் விடுத்து
                                   ஊண் பசியாற

தோல் போர்த்தும்
விளையாட்டில் கூடி
பிளக்கும் வலி
பெயர்த்து மலிய
நிரல்மிசை வழுக்கும்Sunday, April 12, 2015

சிக்கலுற

வண்ணத்துப் பூச்சியும் பறத்தலை
மறக்கும் சிறுநூலைக் கட்டி
வலையாய் விரித்து நீரில் ஆட
மீனின் வாயும் அதனைக் கவ்வி
சிக்கலுற வளையும் மீளல் இன்றி
சிரத்திலிருந்து வாலின் துடுப்பும்
இடையறாது பிணிய முடித்து
நீந்தும் திறனும் விடுத்து எடைகூடி
அமிழ்ந்து எழுந்து கடிந்தூர
சுற்றும் கயிறை நீக்கும் திசையறியா
வழிதவறலில் கல் புரண்டு
மண் புதைந்து கொடி நிரவி
வளியும் பழி தீர்த்ததாய் ஒப்புவித்து
குமிழி உடைத்து உருக்கொண்டு
ஆற்றுலும் வீணில் நிலைமாறி
ஈர்க்கும் விசையில் பயணித்து
நடுவன் குளத்து மிதக்கும்
அச்சக் கனவில் பரிதவித்து