Sunday, November 24, 2013

அகம் விளக்கும்

மை காயும் எழுத்தின் பொருளாய்
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய

Sunday, November 10, 2013

நிகழ்வும் கழியும்

காலம் நின்றது எண்ணில்
பயணித்தது நிலையாய்
பரிணாமமாய்
நிலையற்றதில் பற்றோடு
மாறிய சேர்க்கை
ஒரு கோணம் காட்டி
குலுங்கியதில் பிரிந்து
மறு வடிவம் பெற்று
முன்னதும் ஓர்மையில் மறைந்து
பின்னதும் நிகழ்வில் கலந்து
பொழுதுகளாய்ப் புலர்ந்து
நிறமற்ற வேளைகளில் மயங்கி
கணமெனும் துடிப்பில் இமையாகி
தருணமாய் சாத்திரத்தில் பதிந்து
மணியின் நிழலாய் மௌனித்து
அவ்வமயம் என்றே அதிசயித்து
பருவங்களாய் உதிரும்
ஊழிப் பெருவலி கண்டு
நேரத்தின் நிரலில்
கழியும் தவமெனும் நிறை

Sunday, November 3, 2013

மற்றும் ஒரு...

கனவென்னும் அண்டத்து உயிரி
சுருண்டு விரல்களை விரித்தது

கமலமும் மணம் பரப்பி
குழவியின் மதுரத்தில் ஆழ்ந்திருக்க
குயிலோசை குழல் மயக்கித்தூண்ட
இரவு வடிந்து வெள்ளி சிரித்து
நிலவும் ஞாயிறும் இரு கோணம் தாங்கி
வரும் புது நிகழ்வுதனை அறியா சித்திரமாய்
நிலம் அதிர பிளந்தது பாறை
நீர் சிதறி வெடித்தது அலையாய்
தழும்பி வீழ்ந்த துளி பரவியது
படர்ந்தது ஞாலத்தின் புறத்தில்
வானின் மூலையில் வெகுவேகமாய்
வளியும் அற்ற புகைவெளியில்
பறந்த ஈரம் காயும் முன்
சேர்ந்தது விண்மீனின் முனையில்
அனலில் வேகாது தீயவும் காணாது
அணுவை உள்நுழைத்து புகட்டியது
துடிப்பென்னும் ஓர் புதிரை வாழ்வென
மெய்யும் பொய்யும் மறு உருவாய்
வன்மத்தின் ஆட்சியை பறையடித்து
மீண்டும் ஓர் பிரளயம் காண

முறிந்தது சொப்பனம் வட்டப் பாதையுள்
சலித்து வேறாக்கம் கொள்ளும் அவாவுடன்