Sunday, March 4, 2012

கலவா பிறப்பில்


நான்காய் கால்கொண்டே
மென்பாதம் பொருத்தி
அடியும் நிறை காணா
நடைபழகும் ரகசியத்தில்
பூனையுட் புகுந்த அவளும்
புதுப்புனலறிந்து செறியும்
கரம் நீள கால் பாவும்
சிரம் எழ தோள் கடுக்கும்
குரல் மடுக்க நாபுரளும்
நிணம் சுவை கொடுக்கும்
தன்னில் பிரியா அகம் மறுக்கும்
சீராட்டும் உளமோடு
பிரிந்தும் கூடியும் இணையாய்
மரமேறி கீழ்பாயும்
ஆறறிவும் சுருங்கி உவளும்
குணமொத்து தானறியும்
இம்மையின் இரட்டை
மறுமையின் பன்மையாய்
சிறுத்து மடியும் ஊழின்
வினை வழிச் செல்லும்
போதம் அறியா பேடு
மோகம் தவித்து கடுவன்
தேடும் விழா நாளில்
இறுமாந்து துணைகொள்ள
நுகர்தல் போக்கி பற்றும்
விடுத்து யாசகம் செய்யும்
அறமகள் காண் அவ்விலங்கே

4 comments:

ஜமாலன் said...

பூனையும் குழந்தையும் விளையாடும் ஒரு அகக்காட்சியாக விரிகிறது கவிதை. பிறப்பில் கலக்காவிட்டாலும் வளர்ப்பில் இயல்பில் கலந்துவிடும் ஒரு உருவாகுதல் (பிக்கமிங்) தன்மை இக்கவிதையில் சிறப்பாக உள்ளது. மென்பாதாம் என்பது சரியா. மென்பாதம் என்பதைதான் அப்படி எழுதி உள்ளீர்களா?

Mubeen Sadhika said...

ஆமாம். மன்னித்துக் கொள்ளுங்கள். எழுத்துப் பிழை ஆகிவிட்டது. ஆனாலும் நீங்கள் அதை சரியாக படித்துப் புரிந்துகொண்டீர்கள். மிக்க நன்றி ஜமாலன்.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Mubeen Sadhika said...

நன்றி
Rathnavel Natarajan