Sunday, October 14, 2012

ஏட்டை விலக்கி


குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்

குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்

ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்

3 comments:

ஜமாலன் said...

என்ன இது மெட்டா பிக்சனா?
அருமையாக உள்ளது கவிதை.
அந்த பறவையின் ஒய்யார நடை சுழிப்ப எல்லாம் காட்சியாகிறது.
ஒரு ஓவியம் உயிராகி பறந்துவிடுகிறது கவிதையிலிரந்து வெளிநோக்கி. மூவுலகப்பறவை என்பது நல்ல சொல்லாட்சி. புரியும்படி எழுதி உள்ளீர்கள்.

Mubeen Sadhika said...

மிக்க நன்றி ஜமாலன். நீங்கள் இதை படித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது.

Unknown said...

அருமை சகோ!.....